துரைசிங்கம் ரகு. யாழ்ப்பாணம்: வணிக மஞ்சரி வெளியீடு-1, லோட்டன் வீதி, மானிப்பாய், 1வது பதிப்பு, ஆவணி 1987. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
vi, 145 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இந்நூல் வங்கிச்சட்டம் சம்பந்தமாகப் பல உபயோகமான பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. வங்கியியல் சட்டமும் நடைமுறைகளும் பற்றிய அறிவினை வங்கிகளில் கடமையாற்றும் ஒவ்வொருவரும் நன்கு பெற்றிருத்தல் அவசியம். வங்கியியல் டிப்ளோமா போன்ற இலங்கை வங்கியாளர் நிறுவனம் நடாத்தும் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கும், வங்கிகளில் பதவி உயர்வுப் பரீட்சைகளுக்குத் தோற்றுவோருக்கும், மற்றும் பல்கலைக்கழக வணிகப் பட்டதாரி மாணவர்களுக்கும், மற்றையோருக்கும் இந்நூல் பெரிதும் உதவும். இந்நூல் வங்கியாளரும் வாடிக்கையாளரும், வங்கியாளரும் அவரது இரகசியம் காக்கும் கடப்பாடும், தகுதிநிலை விசாரணைகளும் அவற்றுக்கு விடையிறுக்கும் முறைகளும், கொடுப்பனவுகளைத் தனதாக்கல் அல்லது கொடுப்பனவுகளின் ஒதுக்கீடு, சரியீடு செய்தல், கணக்குகள் ஆரம்பித்தலும் அவற்றைக் கொண்டு நடாத்துதலும், வங்கியாளரின் பணம் கொடுக்கும் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் காரணிகள், பணக் கொடுப்பனவு நிறுத்துதல், வாடிக்கையாளரின் கணக்கினை மூடுதல், பற்றுவரவுப் புத்தகமும் கணக்குக் கூற்றும், கைமாறும் தன்மை, உண்டியலை ஒப்புக் கொள்ளல் அல்லது பொறுப்பேற்றுக்கொள்ளல், காசோலைகள், காசோலைகள் குறுக்குக் கோடிடப்படல், பணம் செலுத்தும் வங்கியாளர், சேகரிக்கும் வங்கியாளர், வைத்திருப்பவன், பெறுமதிவழி வைத்திருப்பவன், முறைப்படி வைத்திருப்பவன், புறக்குறிப்பிடுதல் ஆகிய 18 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் இலங்கை மக்கள் வங்கியின் அதிகாரியாகப் பணியாற்றியவர். (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 008923).