எஸ்.எதிர்மன்னசிங்கம். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2017. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
62 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4041-05-9.
கிழக்கிலங்கைத் தமிழர்களின் குறிப்பாக மட்டக்களப்புத் தமிழர்களின் பண்பாட்டு அம்சங்களைப் பதிவுசெய்து வருபவர்களின் வரிசையில் கலாபூஷணம் எதிர்மன்னசிங்கம் அவர்களும் ஒருவர். இவர் வடக்கு-கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளராகப் பணியாற்றிய காலங்களில் கிழக்கிலங்கை தமிழ் மக்களின் பண்பாடு தொடர்பான பல்வேறுபட்ட பணிகளை ஆற்றிவந்தவர். தன் எழுத்துக்களின் வாயிலாக கிழக்கிலங்கைத் தமிழர்களின் பண்பாட்டுத் தனித்துவங்கள் பற்றி பேசியும் எழுதியும் வந்தவர். இந்நூலில் அவர் பிறப்பு முதலான வாழ்வியல் சடங்குகள், பாரம்பரியக் கலைகள், கோயில் சடங்குகள் ஆகிய விடயங்கள் பற்றிய பல்வேறு தகவல்களைச் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறார். இந்நூலில் சமூகப் பண்பாடு, மருங்கைக் கொண்டாட்டம், பல்லுக்கொழுக்கட்டை சொரிதல், சாமத்தியச் சடங்கு, திருமணச்சடங்கு, மரணச் சடங்கு, மனையடி சாஸ்திரம், குறிகேட்டல், மைபோட்டுப் பார்த்தல், பாரம்பரிய கலைகள், கூத்து, கொம்பு முறிப்பு (கொம்பு விளையாட்டுக்கள்), வசந்தன் கூத்து (வசந்தன் ஆடல்), மகுடிக் கூத்து, பறைமேளக் கூத்து, குரவைக் கூத்து, கிராமிய கவிகள், பாரம்பரிய விளையாட்டுக்கள், இந்து சமயப் பண்பாட்டு முறை, கலத்தில் போடல் ஆகிய தலைப்புக்களின் கீழ் பல்வேறு தகவல்களை பதிவுசெய்திருக்கிறார். மட்டக்களப்பின் மட்டிக்களியில் பிறந்த செல்லத்தம்பி எதிர்மன்னசிங்கம், தனது பல்கலைக்கழகக் காலத்தில் (1963) இருந்தே எழுதி வருகின்றார். இந்நூல் 15ஆவது மகுடம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ளது.