சி.மௌனகுரு. யாழ்ப்பாணம்: சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவு அறக்கட்டளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுன் 2018. (யாழ்ப்பாணம்: வைரஸ் கிரப்பிக்ஸ், இணுவில்).
(2), 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
11.06.2018 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நிகழ்த்தப்பட்ட சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரையின் நூல் வடிவம் இது. கலாநிதி சின்னையா மௌனகுரு கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், கலை கலாசாரபீடப் பீடாதிபதியாகவும் சிறப்புறப் பணியாற்றியவர். இவர் நாடகம், கூத்து முதலிய அவைக்காற்று கலைகளைப் புலமைத்துவ ஆய்வுக்கு இட்டுச் சென்றவர். ஆய்வாளராகவும் நாடகாசிரியராகவும் கூத்துக் கலைஞராகவும் ஆளுமைத்திறன் வாய்ந்த கல்வியியலாளராகவும் விளங்கிய இவர், தமிழர் மத்தியில் இசை கிளைவிட்ட முறைமையை இப்பேருரையில் விரிவாக வெளிப்படுத்தியிருந்தார். அவ்வுரையின் நூல்வடிவமே இதுவாகும். முதற்பகுதியில் தமிழர் மத்தியில் இசை வளர்ந்த வரலாறு பற்றியும் சிலப்பதிகாரக் காலத்தில் (கி.பி.2ஆம் நூற்றாண்டு) வழக்கிலிருந்த தமிழர் இசை பற்றியும், கி.பி. 8-11ஆம் நூற்றாண்டுகளில் பல்லவர், சோழர் காலத் தமிழர் இசை பற்றியும், சோழர் காலத்தின் பின் (கி.பி.12-18 ஆம் நூற்றாண்டு வரையிலான) தமிழர் இசை பற்றியும், தமிழிசை இயக்கம் (கி.பி.19ஆம் நூற்றாண்டில் தமிழர் இசை) பற்றியும் விளக்கியுள்ளார். இரண்டாம் பகுதியில், இந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழ்ச் சினிமா இசை பற்றி விளக்கியிருக்கிறார். தமிழ்ச் சினிமா இசை, தமிழ்ச் சினிமா இசையில் பாபநாசம் சிவன் காலம், தமிழ்ச் சினிமா இசையில் ஜி.இராமநாத ஐயர் காலம், தமிழ்ச் சினிமா இசையில் ராஜேஸ்வரராவ் போன்றோரின் வருகையும் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் பங்களிப்பும், தமிழ்ச் சினிமா இசையில் இளையராஜாவின் சகாப்தம், தமிழ்ச் சினிமா இசையில் ஏ.ஆர்.ரகுமான் சகாப்தம், ஜனரஞ்சக இசையாகச் சினிமா இசை எழுந்தமையும் அதன் பின்னணியும் பற்றி விளக்கியுள்ளார். மூன்றாம் பகுதியில் தமிழிசை யாத்திரை ஆய்வினை ஆற்றுகையாக விளக்கியிருக்கிறார்.