யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி (ஆசிரியர் குழு). யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசெம்பர் 2006. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மார்ட்டின் வீதி).
92 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 60.00, அளவு: 20.5×15 சமீ.
‘ஆற்றுகை’ இதழ் திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். இதன் முதலாவது இதழ் 1994ஆம் ஆண்டு ஐப்பசி-மார்கழி இதழாக வெளிவந்தது. கலை ஆர்வலர்களுக்கும், நாடக அரங்கியலைப் பயிலுகின்ற மாணவர்களுக்கும், அரங்கியலைப் பற்றி அறியவிரும்புவோருக்கும் பயன்மிக்கதாக அமைந்த இவ்விதழின் உள்ளடக்கத்தில் அரங்கவியல் கட்டுரைகள், கலைஞர்கள் பற்றிய குறிப்புக்கள், ஆற்றுகைத் திறனாய்வுகள், அரங்க நூல் அறிமுகம், அரங்க நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் என்பவற்றை தாங்கி வெளிவந்தது. இவ்விதழில் கற்கைநெறி சார்ந்து நாடக எழுத்துருவொன்றினை நோக்கவேண்டிய முறைமை (கா.சிவத்தம்பி), இசை நாடகத்தில் நடிப்பு ஆளுமைகள் (தை.யஸ்ரின் ஜெலூட்), பழமைத் தமிழ் இலக்கண இலக்கியங்களில் நாடகம் (ம.ந.கடம்பேஸ்வரன்), நாடகம்: ரவீந்திரநாத் தாகூரின் துறவி (குழந்தை ம.சண்முகலிங்கம்), அரங்கியலில் புதியநூல் வரவுகள், சமூகத் தொடர்பாடலாக அரங்கு (துர்க்காதாஸ் முகோப்தியான்-மூலம், நவதர்ஷினி கருணாகரன்-தமிழாக்கம்), சிறுவர் உள நெருக்கடிக்கான அரங்கு (யோ.யஸ்ரின் பேனாட்), வார்த்தைகளற்ற நாடகத்தால் வளர்ந்த மனித உறவு (ஜீ.பீ.பேர்மினஸ்), மூன்று அபத்த நாடகங்கள் (சாமுவேல் பெக்கற்- மூலம், ஏ.ஜே.கனகரத்தினா-தமிழாக்கம்), அபத்த நாடகங்களும் பெக்கற்றும் (ஏ.ஜே.கனகரத்தினா), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு (யோ.யோண்சன் ராஜ்குமார்), அண்மைக்கால அரங்கப் பதிவுகள் (கி.செல்மர் எமில்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10344CC).