வடிவேல் இன்பமோகன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(2), xviii, 171 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 750., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-659-634-2.
இந்நூலில் ஒரு சமூகத்தின், ஒரு குறித்த கலை வடிவத்தின் இருப்பு எப்படி அதன் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாக இருக்கமுடியும் என்று ஆராயப்பட்டுள்ளது. கலாநிதி இன்பமோகன் அவர்கள் கூத்துப் பண்பாடு என்ற ஒரு தொடரை இந்நூலில் விரிவாகக் கையாளுகின்றார். கூத்துப் பண்பாடு ஒரு சமூகத்தின் வளமாக இருக்கின்றது என்றால் அந்தச் சமூகத்தில் கூத்தும் அதனைச் சார்ந்த செயற்பாடுகளும் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறுகின்றார். ஈழத்தில் இன்றுள்ள கூத்துச் சூழலை மிகவும் விரிவாகவே- நேர்காணல் வழியாகவும், கள ஆய்வில் தான் கண்டறிந்த தகவல்களின் வழியாகவும் தருகின்றார். அறிமுகம், சமூகம்-பண்பாடு-கூத்து: கோட்பாட்டு உசாவல், சமகாலத்தில் ஈழத்தில் கூத்தின் பயில்வு, குருக்கள்மடம் கிராமத்தில் கூத்துக் கலையின் பயில்வும் வீழ்ச்சியும், கூத்து விடுபட்ட கிராமங்களில் கூத்துப் பண்பாட்டை மீள்கட்டமைத்தல், முடிவுகளும் பரிந்துரைகளும் ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. பின்னிணைப்புகளாக நேர்காணலில் ஈடுபட்டோர் விபரம், தொடர்புடைய படங்கள், படங்களுக்கான விளக்கம், உசாத்துணை, சுட்டி என்பன இணைக்கப்பட்டுள்ளன. கூத்துப் பனுவல் பதிப்பாசிரியர், கூத்து ஆய்வாளர், கூத்துக் கலைக்குப் புத்துயிர்ப்பு அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருபவர் என்ற நிலையில் கலாநிதி வடிவேல் இன்பமோகன் நம் கவனத்திற்குரியவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தனது இளமாணிக் கற்கையைப் பூர்த்திசெய்த இவர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் மெய்யியல்துறைப் பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா அவர்களிடம் முதுதத்துவமாணி, கலாநிதிப் பட்டங்களைப்பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.