மயிலங்கூடல் த.கனகரத்தினம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
36 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 160., அளவு: 24×17 சமீ., ISBN: 978-955-1997-09-0.
பௌத்தர்களிடையே ஜாதகக் கதைகள் மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளன. இவை போதிசத்துவக் கதைகள் எனவும் அழைக்கப்படும். ஏறத்தாழ 500க்கும் மேற்பட்ட ஜாதகக் கதைகள் இன்றளவில் தொகுக்கப்பட்டுள்ளன. ஜாதகம் என்பது பிறப்புப் பற்றிய வரலாறு ஆகும். கௌதமர் புத்தராகி ஞானஒளி பெற்றவராக ஆவதற்கு முன்னுள்ள பிறப்புகளில் உள்ள நிலை போதிசத்துவ நிலையாகும். இந்நிலையில் அவர் பல பிறப்புகள் எடுத்துள்ளார் என பௌத்தர்கள் நம்புவர். அப்பிறப்புகளில் வாழ்ந்த வாழ்க்கைக் கதைகளைக் கூறுவதுதாகவே ஜாதகக் கதைகள் ஆரம்பத்தில் வழக்கில் இருந்தன. பின்னாளில் காலத்துக்குக் காலம் பல வகுப்புகளிலிருந்தும் வந்து பிக்குகளாகப் பௌத்தத்தைத் தழுவியவர்கள், தாம் அறிந்த கதைகளையும் புகுத்தியதாகவே இன்றைய ஜாதகக் கதைகள் வழக்கிலுள்ளன. விலங்குகள் பற்றிய நீதிக்கதைகள், தெய்வீக மாந்திரீகம் முதலியன அடங்கிய விலங்குக் கதைகள், வரலாற்றுத் துணுக்குகள், வேடிக்கைக் கதைகள், மணிமொழிகள், பக்திக் கதைகள் என ஆறு பிரிவுகளில் இன்றுள்ள ஜாதகக் கதைகளை நாம் வகுக்கலாம். மயிலங்கூடல் த.கனகரத்தினம் அவர்கள் எழுதியிருந்த ஜாதகக் கதைகள், ஏற்கெனவே ‘சிறுவர்க்காய பிறமொழிக்கதைகள்: ஜாதகக் கதைகள்’ (கொழும்பு, 1987), ‘ஜாதகக் கதைகள்: சிறுவர்க்கான பிறமொழிக் கதைகள்’ (சென்னை, 2010), ஆகிய வெவ்வேறு தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. 010ஆவது இலக்கியன் வெளியீடாக 2018இல் வெளிவரும் இப்பதிப்பில், பாசாங்கு, மூத்தவருக்கு மரியாதை, புத்தியுள்ள மான், எங்கே அந்த இரத்தினக்கல், நன்றி மறவாத சிங்கம், சண்டையிட்ட காடைகளின் கதை, பேராசைக் காகத்தின் கதை, ஒற்றுமையின் பலம், ஆகிய எட்டுத் தலைப்புக்களில் எழுதப்பட்ட ஜாதகக் கதைகள் இடம்பெற்றுள்ளன.