ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2006. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
(3), 24 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 190., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-8715-37-6.
காகத்தின் கூட்டில் முட்டையிட்டுச் சென்ற ஒரு குயில், தன் குஞ்சை உரிமைகொண்டாட வருவதும், குயில் குஞ்சு தன் தாய் காகமே என்று வாதிடுவதும், கூடுகட்டத் தெரியாத, அடைகாக்கத் தெரியாத, குஞ்சுக்கு தேவையறிந்து உணவூட்டத் தெரியாத நீ எப்படி ஒரு தாயாக உரிமைகோர இருக்கமுடியும் என்று குயில் குஞ்சு எதிர்க்கேள்வி கேட்பதுமான சம்பாஷணையாக இச்சிறுவர் கதை எழுதப்பட்டுள்ளது. ஈற்றில் குஞ்சைத்தேடி உணவுடன் பறந்து வரும் காகம் ‘இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் அம்மா இருக்கவேண்டும். அல்லது அம்மாவாக யாராவது அன்பு காட்டவேண்டும். எந்த ஒரு குழந்தையும் அனாதையாக இருக்கக்கூடாது’ என்ற நீதியை குயில் குஞ்சுக்குப் போதிக்கிறது. குழந்தைகளுக்கான சின்னக் கதையொன்றினை குழந்தை இயல்போடு எளிய சொற்களில் அருமையான நூலாக ஆசிரியர் வழங்கியுள்ளார். குழந்தைகளுக்கு நீதியைச் சொல்லும் முறை அழகானது, சிறப்பானது. இந்நூலுக்கான சித்திரங்களை த.தனபாலன் வரைந்துள்ளார். இந்நூல் 36ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.