ராதிகா பத்மநாதன். கொழும்பு: ராதிகா பத்மநாதன், 1வது பதிப்பு, 2016. (ரத்மலானை: ஜே அன்ட் ஜே பிரின்டர்ஸ், 66/4, முதலாவது தளம், தர்மராம வீதி).
76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-43438-0-1
உண்மையை மட்டுமே பேசும் படைப்புக்கள் எத்துணை அழகு என்பதை இத்தொகுதி சொல்லிச் செல்கின்றது. ஆதங்கம், ஏக்கம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை எனத் தன்னுடைய உணர்வுகளையெல்லாம் கவிவரிகளாக வெளிப்படுத்துகின்றார். இரத்தக் கறைகள் தீராதவொரு வன்மத்தை மூட்டிவிட்டுத்தான் காலம் எம்மிடையே சமாதானத்தை உண்டாக்கியிருக்கின்றது. இரு கை கோர்த்து வேண்டிய நிம்மதி அல்ல இன்றைய அமைதி. வலிந்து திணிக்கப்பட்ட கட்டாயச் சமாதானம் இது எனக் கருதும் இக்கவிஞர், அதற்காகப் பழிக்குப்பழி என்ற வன்மத்தை வளர்க்கவும் முடியாது என்கிறார். வடுக்களைச் சுமக்கும் பல்லாயிரம் மக்களின் மன்னிப்புத்தான் போர் சூழ்ந்திருந்த வடக்கையும் தெற்கையும் இணைக்கும் என்று இவர் கருதுகின்றார். இவற்றையே அர்த்தபூர்வமான கவி வரிகள் நமக்குப் புலப்படுத்துகின்றன. வெற்றிச் செல்வி, தமிழினிக்குப் பின்னர் முன்னாள் விடுதலைப் போராளிகளிலிருந்து மற்றுமொரு படைப்பாளி வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். ராதிகா பத்மநாதன், புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி. அவர் எழுதிய முதல் நூல் இது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தலைமையில் ஒபிஏ கேட்போர் கூடத்தில் வெளியிட்டுவைக்கப்பட்டது. இந்நூல் கவிதை, விவரணக் கதைகள் போன்றவற்றை உள்ளடக்கியது. யுத்தத்தின் போதும் அதன் பின்னருமான ராதிகாவின் உணர்வுகளினதும் சிந்தனைகளினதும் வடுக்களினதும் உண்மையான வெளிப்பாடாகும். விடுதலைப்புலிகளின் மகளிர் அணியில் ஒரு போராளியாக இருந்த ராதிகாவின் கால் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது கண்ணிவெடியில் சிக்குண்டு மிக மோசமாகக் காயமடைந்ததுடன் யுத்தத்தின் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராதிகா உள்ளிட்ட 100 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட காலினை சீர்செய்ய பல சத்திர சிகிச்சைகள் இடம்பெற்றதோடு கிட்டத்தட்ட ஒரு வருடமளவில் வைத்தியசாலையில் தங்கியிருந்தார். அவர் வளர்ந்த சூழ்நிலையை இவரது நூல் தத்ரூபமாக சொல்லிக்காட்டுகிறது. பாலர் நாம், சிறுவர்கள், வாழ்க்கை, இழப்பு, தேசம், மறந்திடுமோ?, பருவம், என் மனம், தாய்மண், நாமும் நம் ஊரும், நெஞ்சம் மறந்திடுமோ?, நம் நாடு, ஏழ்மை, மாவீரர்கள், தோழி, 2009ஆம் ஆண்டு போர், விடுதலைப் புலிகள், பயிற்சி முகாம், போர்க்களம், சமூகம், பிரஜைகள் நல்லிணக்க மத்திய நிலையம், பின்னுரை ஆகிய தலைப்புக்களில் இப்படைப்புக்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 252186).