13696 நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள்.

ஈழபாரதி (இயற்பெயர்: எட்வர்ட் ஜுட் நிக்சன்). திருச்சி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்காரத் தெரு, உறையூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2015. (சென்னை: சாய் தென்றல் பிரின்டர்ஸ்).

64 பக்கம், விலை: இந்திய ரூபா 50.00, அளவு: 21.5×14 சமீ.

இலங்கையில் நெடுந்தீவைச்சேர்ந்தவர் ஈழபாரதி. தமிழகத்தில் புலம்பெயர்ந்து சிலகாலம் வாழ்ந்த பின்னர் தற்போது பிரான்சில் குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். புதுக்கோட்டை தனியார் தொழிற்கல்வி நிலையமொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் எழுதி, தமிழகத்தின் சிற்றிதழ்களில் பிரசுரமான கவிதைகளின் தொகுப்பு இந்நூலாகும். காதல் உணர்வுகள் சொட்டச்சொட்ட காதலைப் பிழிந்தெடுத்து இக்கவிதை நூலைப் பிரசவித்துள்ளார். காதல் என்பது எக்காலத்திலும் ரசிக்கப்படும் உணர்வு. காதலினால் எற்படும் வலி, அவஸ்தை, துன்பம் என்பவற்றைத் தன்னுடைய கவி வரிகளின்மூலம்  பதிவுசெய்திருக்கிறார். காதலின் ஒவ்வொரு பரிமாணத்தையும் தன்னுடைய வித்தியாசமான பார்வையிலும் எழுத்திலும் தந்திருக்கிறார். நாட்குறிப்பற்றவனின் இரகசிய குறிப்புகள் வித்தியாசமானவை.  எழுதி வைக்காமல் மனதில் பதித்து வைத்த நினைவுகளை கவிதைகளாக்கியுள்ளார். நூல்ஆசிரியர் காதலைப்பாடும் அதே நேரம், குழந்தைகளோடு பழகும் நிமிடங்களையும் வாழ்வில் சந்தித்த பொன்னான தருணங்களாகக் கருதுகிறார். அப்பழுக்கற்ற அந்தப் பிஞ்சு உள்ளங்களின் உயரிய அன்புக்கு முன்னால், எத்தனை பெரிய சுமைகளும் எளிதாய் மறந்து போகிறது. மனசுக்குள் ஒரு பட்டாம் பூச்சி சிறகடித்துப் பறக்கிறது. கொண்டாடுவோம் குழந்தைகளை.. வாருங்கள் என ஒரு குழந்தை மனதோடு நம்மை அழைக்கிறார் கவிஞர் ஈழபாரதி. புத்தகங்களையும், மனிதர்களையும் அதிகமாக வாசிக்கும் பழக்கம் கொண்ட அவரது இக்கவிதைப் புத்தகமும் வாசிக்க உகந்தது.

ஏனைய பதிவுகள்