பூர்ணிமா கருணாகரன். கொழும்பு: பூர்ணிமா கருணாகரன், இல. C8, 2/2,B சொய்சா தொடர்மாடி, மொரட்டுவை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (கொழும்பு: எடிசன் பிரின்டர்ஸ்).
120 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 199.00, அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-713-170-2.
‘அப்பாவின் கை பிடித்து’ என்ற முதல் கவிதையினைத் தொடர்ந்து ‘முகங்கள்’ ஈறாக இத்தொகுப்பில் பதிவுசெய்யப்பட்டுள்ள 60 கவிதைகளில் கவிஞர் பூர்ணிமாவின் பார்வையிலான பெண்கள் பற்றிய நோக்கு, பெண் உரிமை பற்றிய விரிவான ஆய்வு என்பன முக்கிய இடத்தை வகிக்கின்றன. மனிதத்துவம், பெண் கல்வி, தாய்மை, தந்தைமை, விதவைகளின் நிலை, மானுட வாழ்க்கை, சமூகச்சீரழிவுகள் காரணமாக முதிர்கன்னிகளாக வாடும் பெண்களின் நிலை, புகலிடத் தமிழர்களினால் ஈழத்தின் வாழ்வியலில் ஏற்படும் பாதிப்புகள், விடுதலைப் போராளிகளின் இன்றைய நிலை, முதியவர்களின் நிலை, மானுட சமுதாயத்தில் தொடரும் வன்முறை மீதான கோபம், அவரது தந்தையாரின் ஆளுமை ஏற்படுத்திய பாதிப்புகள் எனப்பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தும் கவிதைகளை இத்தொகுப்பில் பரவலாகக் காண முடிகின்றது. பெண்கள் மீதான உளவியல் ரீதியான பாதிப்புகளுக்கு ஓர் தனிநபர் தொடக்கம் இச் சமூகம் வரை என்னவெல்லாம் நிகழ்த்திக்கொண்டிருக்கிறது என்பதை பூர்ணிமா கருணாகரனின் இந்தப் படைப்பு சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறது. முதற் கவிதை அவரது தந்தையாரின் ஆளுமையினை, அவ்வாளுமை கவிஞரின் மீது ஏற்படுத்திய பாதிப்பினை வெளிப்படுத்துகின்றது. கூடவே தந்தையாருக்கு நடந்த கொடுமையினையும் எடுத்துக்கூறுகின்றது. இத் தொகுப்பானது எவ்வளவு தூரம் கவிஞரை அவரது தந்தையார் பாதித்துள்ளார் என்பதைப் புலப்படுத்துகிறது. இவரது தந்தையார் தா.திருநாவுக்கரசு அவர்களுக்கே இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63652).