புனித இயாகப்பர் ஆலய சபை. யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2016. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டேர்ஸ், 681, காங்கேசன்துறை வீதி).
xii, 254 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-7331-02-7.
முருங்கன் புனித இயாகப்பர் கோயிலடி மக்கள் என்று பொதுவாக அறியப்படுகின்ற மக்கள் சமூகத்தின் கலைப்பொக்கிஷமாக விளங்குவது ‘சந்தியோகுமையோர் நாடக’மாகும். வழக்கமாக இச்சமூகத்தைச் சேர்ந்த முருங்கன், ஆவணம், முள்ளிக்கண்டல், மன்னார் ஆகிய நான்கு இடங்களைச் சேர்ந்த மக்களும் ஒன்றிணைந்து இந்நாடகத்தை மேடையேற்றுவர். இந்நாடகம் நாவாந்துறையைச் சேர்ந்த கிறிஸ்தோ மரியாம்பிள்ளைப் புலவர், முருங்கனைச் சேர்ந்த மரியான் சந்தான் புலவர் ஆகிய இரண்டு புலவர்களால் எழுதப்பட்டது. இந்நாடகத்தில் புனித இயாகப்பரின் போதனையிலிருந்து அவருடைய இறப்பு வரையுள்ள பகுதியை கிறிஸ்தோ மரியாம்பிள்ளைப் புலவர் எழுதியுள்ளார். தொம்பிலிப்பு வத்தகன் வருகையிலிருந்து தொம்பிலிப்பு வத்தகன் மகன் கழுவேற்றி கொல்லப்பட்டது வரையான பகுதியை மரியான் சந்தான் புலவர் எழுதியுள்ளார். றெம்மிகேல் அரசன் வருகை தொடக்கம் படைப்போர் முடியும் வரை உள்ள பகுதியை மீண்டும் மரியாம்பிள்ளைப் புலவர் எழுதியிருக்கிறார். சந்தியோகுமையோர் என்பவர் இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர். திருவிவிலியத்தின் புதிய மொழிபெயர்ப்பில் யாக்கோபு என்றும், பழைய மொழிபெயர்ப்பில் இயாகப்பர் என்றும் அழைக்கப்பட்டவர்.