செங்கதிரோன் (இயற்பெயர்: த.கோபாலகிருஷ்ணன்). மட்டக்களப்பு: செங்கதிர் இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, சித்திரை 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
93 பக்கம், விலை: ரூபா 400.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-7409-00-9.
மட்டக்களப்பு மாநிலத்தின் பாரம்பரியங்களையும், அம்மக்களின் வஞ்சகமில்லா வாழ்க்கை முறைகளையும் வைத்துக் காவியம் ஒன்றினை வடிப்பதற்காகவே நீலாவணன் வேளாண்மையை குறுங்காவியமாக எழுதத் தொடங்கினார். ஆனால் வேளாண்மைக் காவியத்தை நிறைவுசெய்யும் முன்னரே ‘குடலை’, ‘கதிர்’ ஆகிய இரு பகுதிகளை மாத்திரம் எழுதியிருந்த நிலையில் அவர் 11.02.1975இல் மறைந்துவிட்டார். நீலாவணன் (1937-1975) கிழக்கிலங்கையின் பெரியநீலாவணையைச் சேர்ந்தவர். 1953இல் இவரது முதல் கவிதை பிரசுரமானது. இரு இதழ்களே வெளிவந்த பாடும் மீன் என்ற சஞ்சிகையின் ஆசிரியராகவும் கல்முனை எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர். வேளாண்மையின் தொடர்ச்சியாக ‘விளைச்சல்’ என்ற இக்குறுங்காவியத்தை செங்கதிரோன் அவர்கள் தொடர்ந்தெழுதி நிறைவுசெய்திருக்கிறார். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ‘ஓலை’ இதழ்களில் சிலகாலம் வெளிவந்த இக்காவியம், பின்னர் ‘செங்கதிர்’ இதழில் பெப்ரவரி 2008 முதல் ஓகஸ்ட் 2010 வரை பிரசுரமாகி முற்றுப்பெற்றது. வேளாண்மைக் காவியம் ‘குடலை’, ‘கதிர்’ என இரு பகுதிகளாக வெளிவந்திருந்த நிலையில், இவரது விளைச்சல் என்ற குறுங்காவியம் அக்காவியத்தின் தொடர்ச்சியாக ‘காய்’, ‘பழம்’ எனத் தொடர்ந்து பூரணமடைகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62762/62105).