அனோஜன் பாலகிருஷ்ணன். யாழ்ப்பாணம்: புதிய சொல், கேணியடி ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (தெகிவளை: T.G.).
(7), 8-134 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-42958-0-3.
மானுடப் பிரச்சினைகளில் பாலியல் முக்கியமானது. கீழைத்தேயங்களில் அது அறம் சார்ந்த பெரும் பிரச்சினைகளின் ஆழத்தில் மறைக்கப்பட்டுள்ள ஊற்றாகக் கிடக்கின்றது. ஆண்மையவாதச் சிந்தனை கொண்ட தமிழ்ச் சமூகத்தின் இன்றைய மனநிலையையும், அதன் அகம் சார்ந்த பக்கங்களின் தொடர் மாற்றங்களையும், வாழ்வியலையும் இக்கதைகளில் அனோஜன் பாலகிருஷ்ணன் தொட்டுச் செல்கின்றார். நுகர்வுக் கலாச்சார இலங்கைச் சூழலின் மாறுபட்ட வாழ்வியல் தளங்களினூடாக ஆண்-பெண் உறவு நிலையில் ஏற்படும் வடிவ மாற்றங்களை இவரது பெரும்பாலான கதைகளில் அவதானிக்க முடிகின்றது. இந்நூலில் வேறையாக்கள், அசங்கா, சதைகள், ஃபேஸ்புக் காதலி, அண்ணா, ஜுட், சித்தப்பா ஃபமிலி, ஆராதனா, சிவப்பு மழை, இதம் ஆகிய பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 1992இல் பிறந்த, ஈழ விடுதலைப் போரின் மூன்றாம் தலைமுறையைச் சார்ந்த அனோஜன் அண்மைக்காலமாக ஈழத்திலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் கவனயீர்ப்புப் பெற்றதொரு படைப்பாளி. இலக்கியத்தின் வடிவம், அழகியல், உள்ளடக்கம் குறித்த தேடல்களுடன் உற்சாகமாக எழுதத் தொடங்கியிருக்கும் இவரது எழுத்துக்களில் யாழ்ப்பாணத்தைவிட வித்தியாசமான கலாச்சாரச் சூழல் நிலவும் கொழும்பு, தெகிவளை, அவிசாவளை போன்று வெவ்வேறு இடங்களில் கல்வி கற்பதற்காக வாழ்ந்து பெற்ற அனுபவங்களும் அவற்றைப் படைப்பாக்கும்போது அவருக்கு இயல்பாகவே கைவரும் நுணுக்கமாக விபரிக்கும் ஆற்றலும் பெரும் பலமாகின்றன.