கொற்றை பி.கிருஷ்ணானந்தன். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-4676-60-2.
கொற்றை பி.கிருஷ்ணானந்தன் எழுதிய எட்டுச் சிறுகதைகளின் தொகுப்பு. ‘நான் கண்ட, கேட்ட, பட்டனுபவித்த, என் நெஞ்சை ரணமாக்கி எனக்குள் நடத்திய அகவெளிப் பயணங்களே எனது சிறுகதைகள்’ என்று ஆசிரியரின் பிரகடனம் அவரது கதைகளில் பொருந்திவருவதைக் காணமுடிகின்றது. இத்தொகுப்பில் சிறகு முளைத்திட அதனை விரித்திட, நல்லதோர் வீணை செய்தே, சாம்பல் பூத்த வானமும் சில நட்சத்திரங்களும், காயங்கள், சுடர்மிகு அறிவுடன், துடக்கு, நிலவுக்குள் நெருப்பு, இன்றைக்கு ஒரு முடிவு சொல்லியாக வேண்டும், வெளிரும் சாயங்கள், அருவமும் உருவமும் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. தனது வங்கித் தொழிலோடு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், பெண்களைக் கரைசேர்ப்பதில் பெற்றோருக்கு ஏற்படும் சமூகப் பிரச்சினைகள், பெண்களின் அக உணர்வு வெளிப்பாடுகள், சாதியம் தொடர்பான பிரச்சினைகள், போருக்குப் பின்னரான சமூகப் பிரச்சினைகள், பாலியல் துஷ்பிரயோகம் சம்பந்தமான பிரச்சினைகள் என்பன கதைகளின் பேசுபொருளாகியுள்ளன. கொற்றை பி.கிருஷ்ணானந்தன் சுமார் 45 ஆண்டுக்காலமாக ஈழத்து இலக்கிய வரலாற்றில் பேசப்படுபவர். 70களில் இலங்கை வானொலியின் தேசியசேவை நடாத்திய பௌர்ணமிக் கவியரங்குகளின்மூலம் அவரது கவிதைகள் பல வானலைகளில் தவழ்ந்து வந்ததை அறிவோம். இன்று புனைகதைத்துறையில் தீவிரமாக ஈடுபடும் இவரது ஆரம்பகாலப் படைப்புலகம் கவிதைத்துறையாகவே தொடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62085).