13762 யோவான் 14:2 (சிறுகதைகள்).

திசேரா. (இயற்பெயர்: எஸ்.தியாகசேகரன்). கொழும்பு: சிறகுநுனி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).

156 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×13 சமீ., ISBN: 978-955-97102-4-0.

90களில் இலங்கைத் தமிழ்ச் சிறுகதைத் துறையில் உருவாகி பெரும்பாலும் பரிசோதனையாக முயற்சித்து வரும் திசேராவின் எழுத்தில் உருவாகிய வித்தியாசமான பரிசோதனைப் படைப்புக்களாக இச்சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகள் அமைகின்றது. ‘வாசிப்பின் புதிய தேவைப்பாட்டை வேண்டுவோருக்கும் படைப்பின் சூக்குமத்தைத் தேடுவோருக்கும்’ பொதுவாக இலக்கியத்தின் வடிவமாதிரியில் அக்கறையற்ற திசெராவின் கதைகள் பெருவிருந்தாக அமைகின்றன. கபாலபதி, வெள்ளைத்தோல் வீரர்கள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களைத் தொடர்ந்து இந்நூல் வெளியாகியுள்ளது. விநோதங்களைக் கலையாக்கும் அவரது விஞ்ஞான சாயல் படிந்த எழுத்துப்பாணியில் இதிலுள்ள சில கதைகள் அமைகின்றன. ஆயிரத்தோராவது குழந்தையின் அவதாரப் படலம், அட்சரம் தின்னும் படிவம்,  எண்களுடன் பயணித்தல், அணில் கோடு, அர்த்தமிழந்த கதைகள், இழத்தலின் காலம், காட கௌதாரி கிரீடம், கதைகளுள் உலவும் மனிதன், கதைசொல்லி, நிர்வாண ராச்சியம், வேதாளத்தில் ஏறிப்பறந்த இரு பதுமைகள், ஆறு நட்சத்திரங்களின் கடவுள், நாய் நெடியின் உடை, துர்கதை, வாய்ட்டர்கால், அங்கம் கூவி விற்பவன், கருகிய இருதயக்காரன், செங்கம்பளக்காரன் ஆகிய பதினெட்டுக் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்