13771 இடி மின்னல் மழை (நாவல்).

இராகி (இயற்பெயர்: இரா.கிருஷ்ணபிள்ளை). காரைதீவு (கி.மா): இந்து சமய விருத்திச் சங்கம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (சாய்ந்தமருது: றோயல் அச்சகம்).

viii, 116 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ.

கிழக்கிலங்கையில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக, 1954 முதல் இலக்கியத்துறையில் ஊடாடிவரும் இராகியின் 11ஆவது நூல் இது. பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக்கொண்ட இவர், மணவினை காரணமாக காரைதீவை புகுந்தவீடாகக் கொண்டவர். தான் சார்ந்த மண்ணின் வாசனையையும் அங்கு வாழ்கின்ற மனிதர்களையும் அவர்களது குணாதிசயங்களையும் தன் கதாபாத்திரங்களுக்குள் கொண்டுவந்துள்ளார். தான் பிறந்த கல்முனை பாண்டிருப்புச் சூழலை மண்வாசனையோடு எடுத்துக்காட்டி, கொழும்பின் வெள்ளவத்தை, மருதானை என்று தனது நாவல் களத்தை விரித்துச் செல்கிறார். நாவலின் முக்கிய கதாபாத்திரமான கணக்காளர் வசந்தன் தன் முறைப்பெண்ணான வாசுகியை தங்கையாகக் கருதிய நாள் முதல் இறுதியில் மனைவியாக பந்தத்தில் இணைந்ததுவரை நாவல் விரிந்துசெல்கின்றது. இடையில் தொழில் நிமித்தம் வெள்ளவத்தையில் வாழ்ந்தவேளை மல்லிகா என்ற குடும்பப் பெண் வாழ்க்கையில் நர்த்தனமாட ஆரம்பித்தவேளை அவள் சூட்சுமம் கண்டு மாற்றலாகி மருதானைக்கு வந்து, அங்கு அகிலா என்ற இளம்பெண்ணின் சகவாசத்திற்குள் மாட்டிக்கொள்கிறார். விதி அவர்களைப் பிரிக்க, இறுதியாகத் தன் முறைப்பெண்ணான வாசுகியை மணப்பதாக கதை முடிகின்றது. இங்கு இடைநடுவில் திடீரென வந்து கிளர்ச்சியை எற்படுத்திய குடும்பப் பெண்ணான மல்லிகாவை ‘இடியாகவும்’  தனக்கென பிரம்மனால் உருவாக்கப்பட்டவள் என நினைந்து குறுகிய காலத்துக்குள் மனதைப் பறிகொடுத்து திருமணத்திற்குத் தன்னைத் தயார்படுத்தும் வேளை விதிவசத்தால் பிரிந்து சென்ற அகிலாவை ‘மின்னலாகவும்’, தனக்கென வாழாது இறுதிவரை வசந்தனுக்காகக் காத்திருந்த வாசுகியை ‘மழையாகவும்’ நூலாசிரியர் உருவகப்படுத்தி இடி மின்னல் மழை என்ற தலைப்பினை நாவலுக்கு வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்