பிரமீளா பிரதீபன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
216 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-8818-5.
ஞானம் இலக்கியப் பண்ணையில் வளர்ந்த செல்வி பிரமீளா செல்வராஜாவின் (திருமதி பிரமீளா பிரதீபனின்) முதலாவது நாவல் படைப்பில் வரும் ‘கட்டுப்பொல்’ மரச்செய்கை ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலமாகவே சில தோட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கட்டப்பொல் என்பது சிங்களமொழிச் சொல். இதன் தமிழாக்கம் ‘முள்தேங்காய்’ என்பதாகும். காலி மாவட்டத்தில் உள்ள இகல்கந்தை என்ற பெருந்தோட்டத்தில் கட்டுப்பொல் மரச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. அங்கே தொழில் செய்யும் தொழிலாளர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர். இவர்களைச் சுற்றியே இந்நாவல் நகர்கின்றது. நாவலின் கதையம்சம் இரு தளங்களில் பயணிக்கின்றது. ஒன்று, பாடசாலை சார்ந்தும் மற்றது சமூகம் சார்ந்தும் பரிணமிக்கின்றது. இகல்கந்தையில் உள்ள பின்தங்கிய பாடசாலை ஒன்றிற்கு ஆசிரியராக வரும் வசந்தன், சமூக முன்னேற்றத்தில் அக்கறை காட்டுபவன். படிப்படியாக மாணவர்களிடையே கல்விச் சிந்தனையை மேம்படுத்துகிறான். ஊரில் பாதிக்கு மேற்பட்ட பிள்ளைகள் சிங்களப் பாடசாலைகளுக்குப் போகும் நிலையை இல்லாதொழித்து, தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கிறான். அவனுக்குப் பக்கபலமாக ஆசிரியைகள் துணைநிற்கின்றனர். ஈற்றில் வசந்தன் அச்சமூகத்துக்குள் சங்கமித்துக்கொள்கின்றான். நாவலின் சமூகம் சார்ந்த மற்றொரு தளத்தில் தோட்ட இளைஞர்கள் சிறுமை கண்டு பொங்குகிறார்கள். தோட்டத்தில் இடம்பெறும் அநியாயங்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். சிங்கள-தமிழ் இனமுரண்பாடு கதையோட்டத்தின் ஆணிவேராகின்றது.