மாத்தளை சோமு. மதுரை 625001: மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை: கவிக்குயில் அச்சகம்).
400 பக்கம், விலை: இந்திய ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-908817-9-1.
தமிழகத்திலிருந்து பெருந்தோட்டத் தொழிலுக்கென மலையகத்துக்குக் கொண்டுவரப்பட்ட மக்களின் துயர வாழ்க்கையை இந்த நாவல் கூறுகின்றது. வரட்சியும் பஞ்சமும் அதனால் ஏற்பட்ட மரணங்களும் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கியிருந்த நிலையில் அதிலிருந்து தப்பிக்கலாம் என்ற ஏக்கத்துடன் கடல் கடந்து வந்த ஒரு சமூகத்தின் கதையை இந்த நாவல் கூறுகின்றது. லண்டன் டவர் பிரிஜ் பகுதியில் அன்டன் ஸ்மித், கதரின் ஆகியோரின் சந்திப்பு, காதலர்களான அவர்களிடையேயான உரையாடலுடன் நாவலை மாத்தளை சோமு ஆரம்பிக்கிறார். இவ்விருவருமே பிரித்தானியர்கள். ஸ்மித்தின் தந்தை பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இலங்கையில் தோட்டத் துரையாகப் பணிபுரிந்தவர். அங்கு பணிபுரியும் காலத்தில் சிவப்பி என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தியுள்ளார். அதன் மூலம் 4 பிள்ளைகளுக்குத் தந்தையானவர். பின்னர் லண்டன் திரும்பி மணமுடித்த பிரித்தானிய பெண்ணுக்குப் பிறந்தவன்தான் ஸ்மித். தந்தை மரணமடைந்த பின்னர் அவரது டயறிக் குறிப்புக்களிலிருந்து தந்தையின் இலங்கை வாழ்க்கையை அறிந்துகொள்கின்றாள்; ஸ்மித்தின் தாய். அது ஸ்மித்துக்குத் தெரியவருகிறது. தந்தையின் முதல் மனைவியைப் பார்ப்பதற்காக தன்னுடைய காதலியான கத்தரினையும் அழைத்துக்கொண்டு இலங்கை செல்கிறான் ஸ்மித். இப்படி ஆரம்பிக்கும் நாவலில் பின்னணியில் மலையக மக்களின் வரலாறு பேசப்படுகின்றது. தமிழகத்தில் ஏற்பட்ட வரட்சி. அதனால் ஏற்பட்ட பஞ்சம். அந்தப் பஞ்சத்திலிருந்து தப்புவதற்காக கண்டிச் சீமைக்கு புறப்பட்ட மக்கள். அவர்களை இலங்கைக்குக் கொண்டுவருவதற்காக பிரித்தானிய ஆட்சியாளர்கள் கையாண்ட உபாயங்கள் என பலதரப்பட்ட விடங்களையும் உள்ளடக்கியதாக இந்த நாவல் விரிகின்றது. சிவப்பி என்ற ஒரு பெண் பாத்திரத்தின் மூலம் ஒரு சமூகத்தின் கதையை அவர் சொல்கின்றார். கதையின் களமாக இலங்கை மட்டுமன்றி மலேயாவும் வருகின்றது. தமிழகத்திலிருந்து புறப்பட்ட மக்கள் இலங்கைக்கு மட்டுமன்றி மலேயாவுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள கொக்கோ தோட்டங்களில் அவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அது குறித்தும் இந்த நாவல் பேசுகின்றது. ஒரு சமூகத்தின் கதையை ஒரு நாவலாக எழுதியிருப்பதன் மூலம் அந்த மக்களின் உணர்வுகளை, அவர்கள் எதிர்கொண்டிருக்கக்கூடிய நெருக்கீடுகளை நாவலாசிரியர் உணர்வுபூர்வமாக வெளிக்கொண்டுவந்திருக்கின்றார். இந்த நூல் மலையக மக்களின் வரலாற்றில் முக்கியமான கால கட்டங்களை வெளிப்படுத்தும் அரிய புகைப்படங்களையும் கொண்டிருக்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62828).