உ.நிசார். மாவனல்ல: பானு பதிப்பகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, 2018. (மாவனல்லை: எம்.ஜே.எம். அச்சகம், 119, பிரதான வீதி).
xvi, 127 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-0503-15-5.
ஏற்கெனவே கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல்கள், சிறுவர் கதைகள் என 24 நூல்களைத் தந்துள்ள உ.நிசார் எழுதிய முதலாவது நாவல் இது. இந்த நாவல் முஸ்லிம்களின் மார்க்கம் சம்பந்தப்பட்ட, ஷரிஆ சார்ந்த விடயமொன்றைக் கருவாகக் கொண்டிருக்கின்றது. மார்க்க நம்பிக்கை மீறப்படும்போது, ஏற்படுகின்ற விபரீதங்கள் நாவல் எங்கும் ஊடுபாவாக விரிகின்றது. முஸ்லிம் ஆண் ஒருவர் நான்கு திருமணங்கள் முடிக்க அனுமதிக்கப்பட்டிருந்தாலும் ஒரே தாயின் பிள்ளைகளான இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் திருமணம் முடித்து வைத்திருக்க அனுமதிக்கவில்லை. அதே வேளை அக்குடும்பத்தின் மூத்த சகோதரி மரணமடைந்தால் அடுத்த சகோதரியைத் திருமணம் செய்ய அனுமதியுண்டு. ஆனால் இந்தக் கதையில் வரும் நாயகன் ஹம்தூன் மரிக்கார், ஒரே நேரத்தில் ஒரே தாயின் பிள்ளைகளான இரண்டு சகோதரிகளையும் திருமணம் செய்துகொள்ள விரும்பும் விபரீத ஆசையையும், அந்த ஆசையினால் ஹம்தூன் மரிக்காரின் வாழ்வும் அந்தக் குடும்பத்தின் வாழ்வும் சுக்குநூறாகிப் போவதையும் மிக அவதானமாகவும் அற்புதமாகவும் இந்நாவலில் விளக்கியிருக்கிறார். சுமார் 60 ஆண்டுகளுக்கு முற்பட்ட கண்டி மாவட்டத்தின் உடுநுவரை பிரதேசத்தின் வாழ்க்கை முறைகளைத் தன் நாவலில் சித்திரித்திருக்கிறார். உடுநுவரை பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களின் சிங்களத்தோடும் தமிழோடும் கலந்திருக்கும் மொழியின் செய்திகளும் இனங்களிடையே பரஸ்பர உறவாடல்களும் இந்நாவலில் சிறப்பாகப் பதிவாகியிருக்கின்றன. இந்நாவல் முஸ்லிம்களின் பண்பாட்டை மிகத் தெளிவாகப் புரியவைக்க முனைகின்றது.