இணுவில் ஆர்.எம்.கிருபாகரன். சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஸ்கிரிப்ட் ஆஃப்செட்).
xiv, 222 பக்கம், விலை: இந்திய ரூபா 110.00, அளவு: 18×12 சமீ.
தொழில்நிமித்தம் மத்திய கிழக்கு நாடொன்றில் கணவர் தங்கி வாழ, வவுனியாவில் வயதுவந்த மகள், மகன்களுடன் தங்கிவாழும் ஒரு மனைவியின் குடும்பம், தங்கை தம்பி தாய் எனக் குடும்பப் பொறுப்புகள் இருக்க அதனை உதாசீனம் செய்துவிட்டு, தன்னெண்ணப்படி ஒருத்தியோடு ஓடிப்போய் வாழும் ஒரு மகனின் குடும்பம், அவனது குடும்பத்துடன் இணைந்து வாழும் மாமன், மாமி, ஊதாரிப் பிள்ளை கொண்ட மற்றொரு குடும்பம், கொழும்பில் ஒரு சிங்களப் பெண்ணைக் காதலித்துப் பதிவுத் திருமணம் செய்துகொண்ட ஒரு பல்கலைக்கழக தமிழ் விரிவுரையாளரின் குடும்பம் எனப் பல குடும்பங்களின் பின்னிப்பிணைந்த வரலாறாக இந்நாவல் விறுவிறுப்பாகச் சொல்லப்படுகின்றது. இந்நாவல் தாங்கிநிற்கும் மையக் கருவானது பல்வேறு காரணங்களால் எதிரும் புதிருமாகி நின்று முரண்பட்டும் முட்டிமோதியும் அழியும் மனிதக் குழுமங்களை அவற்றிற்கிடையேயுள்ள முரண்பாடுகள் நீங்கி, இணைத்து வைப்பதன்மூலம் ஒன்றுபட்ட சமூகங்களையும் ஒட்டுமொத்தமாக ஒன்றிணைந்து நிம்மதி தழுவிய உலக சமுதாயத்தையும் உருவாக்க விழையும் நாவலாசிரியரின் பரந்த நோக்கின் தொடக்கப் புள்ளியாக இச்சமூக நாவல் அமைந்துள்ளது எனலாம். கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்நாவலாசிரியர், ஏற்கெனவே ஆறு நூல்களை வெளியிட்டவர். இது இவரது ஏழாவது படைப்பாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63493).