13804 மகிழம்பூவும் அறுகம்புல்லும்.

தீபதிலகை (இயற்பெயர்: கிருஷ்ணவேணி ஸ்ரீகந்தவேள்). மதுரை 625018: தழல் பதிப்பகம், FF-3,A-பிளாக், R.S.L.கோல்டன் அபார்ட்மென்ட்ஸ், திண்டுக்கல் பிரதான சாலை, விளாங்குடி, 1வது பதிப்பு, மே 2018. (மதுரை 625 018: வைகை பிரின்டர்ஸ் அன்ட் பப்ளிஷர்ஸ்).

267 பக்கம், புகைப்படங்கள், விலை: ஸ்டேர்லிங் பவுண்ட் 20., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-1-9996062-0-6.

கவிதை, உரைநடை இரண்டிலும் தடம்பதித்துவரும் தீபதிலகையின் வரலாற்று நாவல் இது. வரலாற்றுப் பின்னணியில் இவரது சொந்த அனுபவங்களையும் ஈழத்தமிழர்களின் மரபுரிமைப் பண்புகளையும் கோர்த்து இந்நாவலை வளர்த்துச் செல்கின்றார். தன் தந்தை வழித்தீவாக நயினாதீவையும்;, தாய் வழித்தீவாக நெடுந்தீவையும் கொண்டமையால் ஆசிரியருக்கு இரு பிரதேசங்களையும் பற்றிய வரலாற்றுத் தகவல்களை நாவலில் சரளமாகப் புகுத்த வாய்ப்பாகியுள்ளது. கதாநாயகனாக வந்தியத்தேவனை மகிழம்பூவாகவும், கதாநாயகியான தீபதிலகையை அருகம்புல்லாகவும் உருவகம்செய்து கதையை முன்னெடுத்துச் செல்கிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் வரும் பாத்திரங்களை உதாரணமாகக் கொண்டு வரையப்பட்ட இவ்வரலாற்று நாவலிலக்கியத்தில் மணிபல்லவம் பற்றிச் சிறப்பாகக் கூறுகின்றார். இந்நூல் சமயம், தமிழ், இலக்கியம், வரலாறு, புவியியல், ஆன்மீகம், மருத்துவம், கணிதம், விஞ்ஞானம் ஆகிய பல்வேறு விடயப் பரப்புகளையும் கனதியாகக் கொண்டு வாசகரின் சிந்தனையைத் தூண்டும் வண்ணம் எளிமையான உரைநடையில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. (மணிபல்லவத்தின் காவல்தெய்வமாகவும் இரத்தினத்தீவில் உள்ள சமந்தகமலை உச்சிக் காவல்தெய்வப் பெண்ணாகவும் தீபதிலகை வரலாற்றில் குறிப்பிடப்படுகிறாள்).

ஏனைய பதிவுகள்