சிவ.ஆரூரன். அல்வாய்: பூமகள் வெளியீட்டகம், நிலாவில், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்ச் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 284 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-7307-00-8.
இன்றைய சமூகம் எப்படி இருக்கின்றது, அது எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது நாவலின் மூலம் சிவ.ஆரூரன் எடுத்துக் காட்டியிருக்கின்றார். யாவருங் கேளிர் நாவல் ஒரு மார்க்சிய பார்வையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. யாருமே மார்க்சிஸ்டுகளாகப் பிறப்பதில்லை. ஆனால் அவர்கள் அறிவியல் ரீதியாக, சிந்தனை ரீதியாக கல்வி ரீதியாக உருவாக்கப்படுகின்றார்கள். கற்றதன் மூலம் மார்;க்சியவாதிகளாகியவர்கள், பின்பு அனுபவங்கள் பெற்றதன் மூலம் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றார்கள். பலர் கற்றுக்கொள்ளாமலே, பெற்றுக்கொண்டதன் மூலம் மார்க்சியவாதிகளாக மாறியிருக்கின்றார்கள். இரண்டு சந்ததிகளுக்கிடையிலான ஓர் இணைப்பை இந்த நாவல் ஏற்படுத்தியிருக்கின்றது. வயது முதிர்ந்த ஒரு மார்க்சிஸ்ட். ஓர் இளைஞன். இவர்களுக்கிடையில் இடம்பெறுகின்ற ஓர் உரையாடல் இந்நாவலின் முக்கிய அம்சமாக இடம்பெற்றிருக்கின்றது. அந்த இளைஞன் சிந்தனை ரீதியாகத் தான் பெற்றுக்கொள்ள விரும்புவதை, அந்த மார்க்சிஸ்டிடம் இருந்து பெற்றுக்கொண்டானா என்பதுதான் இந்த நாவலின் கருவாக இருக்கின்றது. இந்த சமுதாயத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி, சமூகம் நல்ல வழியிலே, மனித நேயத்துடன் வாழ வழிவகுக்கின்ற ஓர் இலக்கியப் படைப்பாக இந்நாவல் வெளிவந்திருக்கின்றது. மேலும், சமூக விழுமியத்தையும், சமுதாய பண்புகளையும் அதேவேளை, கிராமிய பண்புகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றது. இன்றைய நடைமுறை வாழ்க்கையில் நாங்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைத்திருக்கின்ற அருமையான நாவலாகவும் யாவரும் கேளிர் நாவலைப் பார்க்க முடிகின்றது. இலங்கைச் சிறையிலே அரசியல் கைதியாக வாடுகின்ற சிவ.ஆரூரன், முன்னதாக யாழிசை என்ற நாவலை எழுதியிருக்கின்றார். அதற்கு சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்திருக்கின்றது.