முல்லைமணி வே.சுப்பிரமணியம். முள்ளியவளை: முல்லை இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, மே 1999. (வவுனியா: வாணி கணனி அச்சகம்).
104 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ.
முல்லைமணியின் இலக்கியப் பார்வைகள் இந்நூலில் 13 கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. இலக்கியத்தில் உணர்வும் அறிவும், இலக்கிய இரசனை, இலக்கிய வரலாறு, இலக்கிய விமர்சனம், இயலும் இசையும், நவீன கவிதையும் புதுக்கவிதையும், தமிழில் உரைநடை, இலக்கண வரம்பு, கணிதரீதியில் குறள் விளக்கம், பாரி மட்டும்தானா வள்ளல்?, மஹாகவியின் கோடை, மூன்று நிலைகள், தமிழர் கூத்து மரபு ஆகிய தலைப்புகளில் இவை இடம்பெற்றுள்ளன. இந்நூலாசிரியர் எழுத்துலகில் நாடகம், சிறுகதை, நாவல், கவிதை, வரலாற்று ஆய்வுகள், இலக்கிய திறனாய்வு எனப் பல்வேறு துறைகளில் தனது புலமையை ஆழமாகப் பதித்துவந்தவர். முல்லைமணி என்ற புனைபெயரில் பல நூல்களை எழுதியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளியவளையில் பிறந்த இவர், இலங்கை பல்கலைக்கழகத்தில் தமிழில் சிறப்பு கலைமாணி பட்டம் பெற்றவர். இவரது கலை இலக்கிய ஆய்வுப் பணிகளை அங்கீகரித்து 2005இல் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்தது. பாடசாலை அதிபர், ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர், கொத்தணி அதிபர், பிரதம கல்வி அதிகாரி, மாவட்ட கல்விப் பணிப்பாளர் முதலான பதவிகளை வகித்து திறம்பட சேவை புரிந்தவர். இவரது ‘பண்டாரவன்னியன்’ வரலாற்று நாடகம் இதுவரை ஐந்து பதிப்புகள் வெளியாகியுள்ளதுடன் இன்றுவரை நாடகமாகவும் கூத்தாகவும் பேணப்பட்டு வருகின்றது. முல்லைமணியின் 65 ஆண்டுகால எழுத்துலகப் பங்களிப்பை பாராட்டி, 2016ஆம் ஆண்டு சாகித்திய ரத்னா என்ற அதியுயர் விருதை இலங்கை அரசு வழங்கி கௌரவித்தது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 021051).