13814  இலக்கியம்: விசேட மலர் 2018: இலங்கையில் எழுந்த இலக்கியச் சர்ச்சைகள்.

ஸ்ரீ பிரசாந்தன் (தொகுப்பாசிரியரும் பதிப்பாசிரியரும்), கொழும்பு: அரச இலக்கிய ஆலோசனைக் குழு, கலாசாரஅலுவல்கள் திணைக்களம்,  உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, 8ஆம் மாடி, செத்சிறிபாய, பத்ரமுல்ல, 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

vi, 248 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-3748-07-2.

இலங்கையில் அவ்வப்போது காத்திரமான இலக்கியச் சர்ச்சைகள் பல இடம்பெற்றுவந்துள்ளன. காவியம், பதிப்பு, தொகுப்பு, பாநாடகம், இலக்கியக் கோட்பாடு எனப் பல மையங்களை முன்வைத்துச் சுழன்ற சர்ச்சைகளை ‘இலக்கியம்- விசேட மலர் 2018’ உள்ளடக்குகின்றது.  மூன்று பகுதிகளாக விரியும் இம்மலரின் முதலாம் பகுதியில் ஈழத்தில் இடம்பெற்ற முக்கிய இலக்கிய விவாதங்கள் குறித்த ஒன்பது கட்டுரைகள் உள்ளன. ஈழத்தில் நடந்த இலக்கியச் சர்ச்சைகள் (சி.தில்லைநாதன்), சி.வை.தாமோதரம்பிள்ளையின் எழுத்துகளால் மேற்கிளம்பிய கண்டனங்கள் (பாஸ்கரன் சுமன்), கட்டுரைக் காதை: சிலப்பதிகாரம் குறித்த இலக்கியச் சர்ச்சை (ஸ்ரீபிரசாந்தன்), க.கைலாசபதியின் முற்போக்கு இலக்கியமும் அழகியற் பிரச்சினைகளும் தொடர்பான சர்ச்சை (செ.யோகராஜா), மு.தளையசிங்கம்-க.கைலாசபதி வாதப்பிரதிவாதங்களும் முற்போக்கு இலக்கியத்தில் இயங்குதளமும் (சி.ரமேஷ்), துட்டுக்கு உதவாதா சொட்டைக் கவி?-அங்கதமாய் நிகழ்ந்த பாரதி கவிதைச் சமர் குறித்து நினைவில் மீட்டல் (இராஜேஸ்வரன் இராஜேஸ்கண்ணன்), முரண்களில் மகிழும் கருத்தியல் வெளிச்சம் வெங்கட் சாமிநாதன்-எம்.ஏ.நுஃமான்-மு.பொ. விவாதங்களை முன்வைத்து (த.அஜந்தகுமார்), ஈழத்துத் தமிழ்ப் பா நாடகங்களை முன்னிறுத்திய விவாதங்கள் (தி.செல்வமனோகரன்), இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்-தொகுப்பும் சர்ச்சையும் (சு.முரளிதரன்) ஆகியவையே அவையாகும். இரண்டாம் பகுதியில் முற்போக்கு இலக்கியம் குறித்த கலைச்செல்வியில் இடம்பெற்ற கா.சிவத்தம்பி, மு.தளையசிங்கம், நவாலியூர் சோ.நடராஜன் ஆகியோரின் விவாதக் கட்டுரைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. மூன்றாம் பகுதியில் ‘முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும்’ தொடர்பாக பல இதழ்களில் வெளியான கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும் (க.கைலாசபதி), குருக்களை மிஞ்சும் சீடப்பிள்ளை (அ.யேசுராசா), புதிய திராட்சை இரசமும் பழைய சித்தையும் (மு.புஷ்பராஜன்), ‘அலையில்’ மிதக்கும் கைலாசபதி, பழைய அலைகளும் புதிய சமர்களும் (எல்.ஜோதிகுமார்), தமிழ் இலக்கியப் புலம்: மார்க்சியக்காரர்கள் எதிர் உருவவியல்வாதிகள் (சமுத்திரன்), உருவம் உள்ளடக்கம் மார்க்சிய விமர்சனம் (றெஜி சிரிவர்த்தனா), நீ சொன்னால் காவியம் (சி.சிவசேகரம்), நீங்களாவது காவியம் பாடலாம் (எம்.ஏ.நுஃமான்), முற்போக்கு இலக்கியம் என்றோர் யானை இருந்ததாம் (சி.சிவசேகரம்), இலங்கை இலக்கியச் சூழலும் விவாதமும், இலங்கை இலக்கியச் சூழலும் விவாதமும் சில குறிப்புகள் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந் நூலின் ஆசிரியர் குழுவில் சு.முரளிதரன், சி.ரமேஷ், எஸ்.சிவநேசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்