என்.கே.எஸ்.திருச்செல்வம். கொழும்பு: அகில இலங்கை இந்து கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, ஓகஸ்ட், 2013. (கொழும்பு 13: எஸ்.பி.டிசைன்ஸ் அன் பிரின்டர்ஸ், 249, ஜம்பட்டா வீதி).
viii, 390 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 450., அளவு: 21×14 சமீ.
2012ஆம் ஆண்டு ஆடிமாதம் ஆசிரியர்; மேற்கொண்ட கதிர்காமப் பாத யாத்திரையை ஒரு வரலாற்றுப் பதிவாக்கியுள்ளார். உகந்தை முதல் கதிர்காமம் வரையிலான புனிதவனத்தில் பாதயாத்திரை மேற்கொண்டு 74 கிலோ மீற்றர் தூரத்தை ஆறு நாட்களில் பயணித்து அதனை ஒரு பயணக்கதையாக ஆவணப்படுத்தியிருக்கிறார். பானமை, உகந்தை, குமனை, யாள, கதிர்காமம் ஆகிய ஐந்து இடங்களினூடான பயணத்தில் தமிழருக்கும் சைவத்துக்கும் உரிய 150 வரலாற்று முக்கியத்துவமான இடங்களை அடையாளப்படுத்தி விபரங்களை வழங்கியுள்ளார். மேலும் கதிர்காமத் திருத்தலத்தைத் தரிசித்த 45 முனிவர்கள், சித்தர்கள் பற்றிய விபரங்களையும் இந்நூலில் தேடிப் பதிவுசெய்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பட்டதாரியான நூலாசிரியர் இந்நூலை கதிர்காமம் – ஓர் அறிமுகம், கதிர்காம புனித பாதயாத்திரை – ஓர் அறிமுகம், கந்தசுவாமிக் கடவுளின் புனிதபூமி, சித்தர்களும் முனிவர்களும் நடமாடிய புனிதவனம், பாதயாத்திரை-மட்டக்களப்பு முதல் காரைதீவு வரை, பாதயாத்திரை- காரைதீவு முதல் திருக்கோயில் வரை, பாதயாத்திரை-திருக்கோயில் முதல் பானமை வரை, புனித பூமியில் பாதயாத்திரை-பானமை முதல் உகந்தை வரை, புனித பூமியில் பாதயாத்திரை- உகந்தை முதல் வண்ணாத்தி ஓடை வரை, புனித பூமியில் பாதயாத்திரை- வண்ணாத்தி ஓடை முதல் கும்புக்கன் ஆறு வரை, புனித பூமியில் பாதயாத்திரை- கும்புக்கன் ஆறு முதல் நாவலடி வரை, புனித பூமியில் பாதயாத்திரை- நாவலடி முதல் மாணிக்க கங்கை வரை, புனித பூமியில் பாதயாத்திரை- மாணிக்க கங்கை முதல் வீரச்சோலை வரை, புனித பூமியில் பாதயாத்திரை- வீரச்சோலை முதல் கதிர்காமம் வரை, கதிர்காமக் கோயில்கள், கதிர்காம பாதயாத்திரைக் குழுக்கள் ஆகிய தலைப்புகளின் கீழான 16 அத்தியாயங்களில் எழுதியுள்ளார். யாத்திரை செல்லும் பாதை வரைபடமும் இணைக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58443).