மறவன்புலவு க.சச்சிதானந்தன். சென்னை 600002: காந்தளகம், 68, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஐப்பசி 2007. (சென்னை 600002: காந்தளகம், 68 (834) அண்ணாசாலை).
32 பக்கம், விலை: இந்திய ரூபா 10., அளவு: 21×14 சமீ.
பாக் நீரிணைப்பு மற்றும் இராமர் பாலம் பகுதிகளை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்திற்கு உகந்ததாக மாற்றும் திட்டமே சேது சமுத்திரக் கப்பல் கால்வாய்த் திட்டமாகும். இத்திட்டம் நிறைவேறும்பொழுது இக்கால்வாய் வழியாக செல்லக்கூடிய அளவும் வேகமும் கொண்ட கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் இருந்து இலங்கையைச் சுற்றாமல் சேதுக் கால்வாய் வழியாக வங்கக் கடலை அடைய முடியும். ஆங்கிலேயர் காலத்தில் 9, விடுதலைக்குப் பின் 7 ஆக, 16 வல்லுநர் குழுக்கள் வழங்கிய பரிந்துரைகளின் திரட்சியே இன்றைய சேதுக் கால்வாய்த் திட்டமாகும். வங்காள விரிகுடாவுக்கும் அரபிக் கடலுக்கும் இடையிட்ட கடல் தரையானது, 1000 மீ. ஆழத்திலிருந்து செங்குத்தாக உயர்கிறது. தமிழத்துக்கும் இலங்கைக்கும் இடையே 916 மீ. சராசரி ஆழமுள்ள, 10,000 சதுர கிமீ. பரப்புள்ள மேடையாகிப் பாக்கு நீரிணையைத் தாங்கி நிற்கிறது. பாக்கு நீரிணையின் அயல்கடல் நீரோட்டங்கள், அதன் வட தென் விளிம்புகளை நீள் திடல்களாக்கின. கப்பல் பயணத்துக்கு அத்திடல்கள் இடையூறாயின. 30 கிமீ.க்கும் கூடுதலாக நீளும் அவ்விரு திடல் தொடர்களில் 300 மீ. அகலத்துக்கு 12 மீ ஆழத்துக்குத் தூர் வாருவதால் அமைவதே சேதுக் கால்வாய். திடல் தொடர்களுள்ள விளிம்புகளைக் கடந்து பாக்கு நீரிணையுள் நுழைந்தால்;, கப்பல் பயணத்துக்குரிய ஆழம் உள்ளது. 300 மீ. அகலக் கால்வாய் ஆதலால் ஒரே நேரத்தில் இருவழிப் பயணம் சாத்தியமாகிறது. 12 மீ. ஆழமுள்ளதால் உலகின் பயண, சரக்கு மற்றும் பன்முகச் சேவைக் கப்பல்கள் இக்கால்வாய் வழியாகப் பயணிக்கலாம். சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்குக் கடல்வழி இலங்கையைச் சுற்றி வர 1400 கிமீ. தூரமும் 65 மணி நேரமுமாகும்; சேதுக் கால்வாய் வழியாகப் பயணித்தால்; 753 கிமீ. தூரமும் 35 மணி நேரமுமாகும். ஆழமான தேடல்களுடன் விரியும் இவ்வாய்வுக்கட்டுரை, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையாகும்.