தெளிவத்தை ஜோசப். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
(6), 104 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-641-0.
ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் ஈழத்தில் தோன்றிய நவீன இலக்கிய எழுச்சிக்குத் தன் முயற்சியாலும் உழைப்பாலும் அடித்தளமிட்ட முன்னோடிக் கலைஞர் இலங்கையர்கோன் எனப்படும் என்.சிவஞானசுந்தரம். தென்னிந்தியாவில் மணிக்கொடி தோன்றிய அதே 1933இல் இலங்கையில் எவ்வித வழிகாட்டலும் இன்றித் தனது முதல் சிறுகதையான ‘மரியமதலேனா”வை கலைமகளில் வெளியிட்டு ஈழத்தமிழ் சிறுகதைக்கான மரபினையும் வரலாற்றினையும் தோற்றுவித்தவர் இவர். இலங்கையர்கோன் எழுதியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளில் வெள்ளிப்பாதசரம் என்ற தொகுதி தரும் 15 சிறுகதைகள் மட்டுமே இன்றைய வாசகனுக்கு வாசிக்கக் கிடைக்கின்றது. அத்தொகுதியில் இடம்பெறாத அவரது நல்ல படைப்புகள் சிலவற்றையும் மாதிரிக்கொன்றாகத் தந்திருக்கிறார் தெளிவத்தை ஜோசப். இலங்கையர்கோன் பற்றிய பிற எழுத்தாளர்களின் படைப்புகள் சிலவற்றையும் இந்நூலில் அவர் இணைத்திருக்கின்றார். இதில் இலங்கைத் தமிழ்ச் சிறுகதை முன்னோடி இலங்கையர்கோன் என்ற அறிமுகக் கட்டுரை முதலிலும், தொடர்ந்து இலங்கையர்கோனின் படைப்புகளான வஞ்சம் (சிறுகதை), குவேனி (கிராம ஊழியனில் எழுதிய நாடகம்), அந்தச் சாவி (மணிக்கொடியில் வெளிவந்த சிங்கள மொழிபெயர்ப்புக் கதை), தமிழின் மறுமலர்ச்சி (மறுமலர்ச்சியில் எழுதிய கட்டுரை) ஆகிய நான்கு ஆக்கங்களும், இலங்கையர்கோன் பற்றிய பிறரின் படைப்புக்களான, வெள்ளிப் பாதசரம்-நூல்விமர்சனம் (க.கைலாசபதி), வெள்ளிப்பாதசரம்-சிறுகதை விமர்சனம் (வன்னியகுலம்), இலங்கையர்கோனின் அழகியல் பாங்கு (கே.எஸ்.சிவகுமாரன்), ஈழத்தமிழ் சிறுகதை முன்னோடி இலங்கையர்கோன் (ஜேயார்), நான் கண்ட இலங்கையர்கோன் (வ.அ.இராசரத்தினம்), இலங்கையர்கோனின் வெள்ளிப்பாதசரம் சிறுகதைத் தொகுப்பு- ஒரு நோக்கு (யோகம் நவஜோதி), புதிய வெள்ளிப்பாதசரம் (திருமலை வீ.என்.சந்திரகாந்தி) ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இறுதியில் இலங்கையர்கோனின் படைப்பாக்கங்களின் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.