13932 குறமகள்: நினைவழியா நினைவுகள்.

எஸ்.திருச்செல்வம் (தொகுப்பாசிரியர்). Canada: தமிழர் தகவல் வெளியீட்டகம், Ahilan Associates, P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4, 1வது பதிப்பு, நவம்பர் 2016. (Canada: Ahilan Associates, Printers and Publishers,  P.O.Box 3, Station F, Toronto, Ontario M4Y 2L4).

74 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

அமரர் குறமகள் (திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் 1933-2016) அவர்கள் பற்றிய நினைவுப் பகிர்வுகளின் தொகுப்பு இது. தமிழிலக்கிய உலகில் மூத்த படைப்பாளியான குறமகள் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஈழகேசரியின் மூலமாகப் படைப்புலகத்தில் கால் பதித்தவர். சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, கட்டுரை, ஆய்வு, விமர்சனம், நாடகம், திரைக்கலை, மேடைப்பேச்சு, வானொலி-தொலைக்காட்சி உரையாடல், அரசியல் கருத்தாடல், ஆன்மீக விளக்கவுரை என்று அகண்ட தமிழ்ப் பரப்பின் சகல துறைகளிலும் களம் கண்டவர். தனது முதலாவது சிறுகதைத் தொகுதியை 56ஆவது வயதில் (1990இல்) ‘குறமகள் கதைகள்’ என்ற பெயரில் வெளியிட்டவர். அது பின்னர் 2000இல் மீள்பதிப்புக் கண்டது. 2001இல் ‘உள்ளக்கமலமடி’ என்ற 2ஆவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது. பயிற்றப்பட்ட ஆசிரியையாக கல்வித்துறையில் கால் பதித்த இவர் பின்னர் பட்டதாரி ஆசிரியையாகி சுமார் 25 ஆண்டு ஆசிரிய சேவையின் பின்னர், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளரானார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் நாடகத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்ற முதல் தமிழ்பெண் இவராவார். அதன்பின் நாடகத்துறையிலும் திரைப்படத் துறையிலும் பங்களித்திருந்தவர். ஓய்வின் பின்னர் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்த குறமகள், தனது இளைய மகளான குகபாலிகாவை (மேஜர் துளசி) விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கி மாவீரராகக் கண்டவர். முதுமாணிப்பட்டத்திற்கான இவரது ஆய்வு ‘யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி-ஓர் ஆய்வு’ என்பதாகும். இது 2006இல் நூலுருவாகியது. இவருக்கு 1994ஆம் ஆண்டு தமிழர் தகவல் விருது வழங்கப்பட்டது. மேலும் 2005இல் கனடிய தின விழாவில் தமிழர் தகவல் குழுமத்தினரால் ஐம்பதாண்டு இலக்கிய வாழ்வுக்கான தங்கப் பதக்கமும் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். வாழ்வின் இறுதி 17 ஆண்டுகளும் பிராணவாயு சிலிண்டருடன் நடமாட நேர்ந்தபோதிலும், கனடாவின் இலக்கிய நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்காற்றி வந்தவர் குறமகள். 2016 செப்டெம்பர் 15ஆம் திகதி அமரத்துவமடைந்த பின்னர் 31ஆம் நாள் வெளியீடாக அவர் நினைவாக வழங்கப்பட்ட அஞ்சலி உரைகள், மலரும் நினைவுகளைத் தாங்கிய கட்டுரைகளுடன் இந்நூல் வெளிவந்துள்ளது.  (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062070).

ஏனைய பதிவுகள்