தி.ஞானசேகரன்; (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).
292 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 25×17.5 சமீ.
ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 217ஆவது இதழ் (ஒளி 19, சுடர் 01, ஜுன் 2018) அருள்வாக்கி அப்துல் காதிர் புலவரின் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அருள்வாக்கி பற்றிய கட்டுரைகளாக அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் காலமும் கவிதையும் (எம்.ஏ.நுஃமான்), அருள்வாக்கி புலவர் பற்றிய சரிதக் குறிப்புகள் (ஞானம் பாலச்சந்திரன்), இலக்கிய இன்பம் -1973 (எஸ்.எம்.ஏ.ஹஸன்) ஆகியவை இடம்பெற்றுள்ளன. அருள்வாக்கியின் அரிய நூல்களான பிரபந்த புஞ்சம் (அடைக்கலமாலை, முனாஜாத்து, எண்கலை வண்ணம், வன்மெல்லிசை வண்ணம், கண்டிப் பதிற்றுப் பத்தந்தாதி, அருண்மணி மாலை), சந்தத்திருப்புகழ், காட்டுபாவா சாஹிபு கும்மி, வழிநடைபயித்துமாலை, காரணப் பிள்ளைத் தமிழ், தன்பீஹூல் முரீதீன் என்பவை இங்கே மீள்பதிப்புச் செய்யப்பட்டுள்ளன. அருள்வாக்கியின் கவிகள், பதங்கள், அருள்வாக்கி பற்றி பிற சான்றோர்களின் கருத்துக்கள் என்பனவும் மிக விரிவாக இச்சிறப்பிதழில் தரப்பட்டுள்ளன. அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் பற்றிய ஆய்வு மேற்கொள்ள முனையும் எவருக்கும் இச்சிறப்பிதழ் அரியதொரு உசாத்துணை ஆவணமாக இருக்கும். நூலகங்கள் இதனை ஒரு சஞ்சிகை இதழாகக் கருதாமல் தனி உசாத்துணை நூலாகப் பாதுகாப்பதே பொருத்தமாகும்.