த.ஆனந்தமயில். வல்வெட்டித்துறை: ஊர்மனை (கொத்தன்தறை), பொலிகண்டி கிழக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2012. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
64 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
எழுத்தாளர் அமரர் த.ஆனந்தமயில் அவர்களின் மறைவின் 31ஆம் நினைவுதினத்தையொட்டி வெளியிடப்பட்ட நினைவு மலர். த.ஆனந்தமயில் (8.11.1947-11.3.2012) யாழ்ப்பாணம், கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம், பொலிகண்டியில் வசித்து வந்தவர். ஆரம்பக்கல்வியை கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலத்திலும் இடைநிலைக் கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், மற்றும் கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். உயர் தரத்தை வல்வை சிதம்பராக் கல்லூரியில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாகப் பயின்று கலைமாணிப் பட்டம் பெற்றார். எழுதுவினைஞராக பணிபுரிந்தார். கொழும்பு பரீட்சைத் திணைக்களத்திலும்; மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், அனுராதபுரம், நுவரெலியா, முல்லைத்தீவு ஆகிய கல்வித் திணைக்களங்களிலும் பணியாற்றினார். இறுதியாக பருத்தித்துறை வலயக் கல்வி அலுவலகத்திலும் கரவெட்டி கோட்டக்கல்வி அலுவலகத்திலும் பணியாற்றினார். சிறுகதை, கவிதை, குறுநாவல், நாடகங்கள், மொழிபெயர்ப்புக்கள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை இதுவரை எழுதியுள்ளார். இவர் எழுதிய ‘சீதனம்’ என்ற நாடகம் 1980-1981 காலப்பகுதியில் பொலிகை ஐக்கிய விளையாட்டுக் கழகத்தால் மேடையேற்றப்பட்டது. இவரது ‘வாக்குறுதி’, ‘எதற்குமோர் எல்லையுண்டு’ ஆகிய நாடகங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 1995 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு விபத்தின் போது ஏற்பட்ட தாக்கத்தால் இவர் நடையை இழந்தார். இவர் எழுதிய குறுநாவலான ‘அம்மாவரை அவன்’ இம்மலரில் இடம்பெற்றுள்ளது. இவரது தாயின் மரணம் வரையிலான தனது வாழ்க்கை வரலாற்றை இந்நாவலில் பதிவுசெய்திருந்தார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51343).