ஆ.மு.சி.வேலழகன். திருப்பழுகாமம் 2: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், பிரதான வீதி, பெரியபோரதீவு அஞ்சல், 1வது பதிப்பு, மே 2017. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி).
(2), xvii, 97 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-7300-01-6.
ஆ. மு. சி. வேலழகன், ஆதிநாராயணன், முத்து, சின்னத்தம்பி ஆகிய பெயர்களில்; எழுதிவரும் ஓர் ஈழத்துக் கவிஞரும், எழுத்தாளரும், பன்னூலாசிரியருமாவார். மட்டக்களப்பு மாவட்டம், திருப்பழுகாமத்தில் ஆதிமுத்து சின்னத்தம்பி, வேலாயுதர் வள்ளியம்மை தம்பதியினரின் மகனாக மே 12, 1939 இல் பிறந்த சி.வேல்முருகு எனும் இயற்பெயர் கொண்ட ஆ. மு. சி. வேலழகன திருப்பழுகாமம் மெதடிஸ்தமிசன் பாடசாலையில் கல்வி கற்றார். இளவழகன் 1952 காலப்பகுதிகளில் தந்தை ஈ.வெ.ரா. பெரியார், ப.ஜீவானந்தம், சிங்காரவேலர், பேரறிஞர் அண்ணாதுரை போன்றோரின் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களால் கவரப்பட்டவர். பின்னாளில் அமிர்தகழியிலே நிரந்தரமாக வாழ்ந்துவருபவர்;. இலங்கைப் போக்குவரத்துச் சபையில் ஓர் பஸ் சாரதியாக இணைந்து 32 வருடங்கள் பணியாற்றினார். 1972 முதல் இலக்கியத்துறையில் எழுதி வருபவரும், எழுபத்தெட்டு வயதைத் தாண்டும்; மூத்த படைப்பாளியான கவிஞர் ஆ.மு.சி.வேலழகன் எழுதிய மலரும் நினைவுகளே இந்நூலில் வாழ்வியல் பதிவுகளாகியுள்ளன. மாட்டுவண்டி ஓட்டிய சிறுவனாக, எருமைமாடு விரசியது, அலம்பல் வெட்டச் சென்ற இடத்தில், சபாரெத்தினம் அவர்கட்கு அடித்தேன், காலஞ்சென்ற பரிகாரம், பேய் கூட்டிவந்த கதை, கோழி திருடியது, உள்ளத்தாற் பொய்யாது ஒழுகின், ஐம்பது சதம் பணமும் நூற்றி இருபது மைல் பயணமும், கைதியான கரன், 1977இல் இனக்கலவரம், அன்பிற்குமுண்டோ இனம்? ஆகிய தலைப்புகளில் இவரது பன்னிரு அனுபவப் பகிர்வுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.