சின்னத்துரை குமாரசாமி, ஸ்ரீமதி குமாரசாமி. மானிப்பாய்: சி.குமாரசாமி, ‘கல்யாணி’, லோட்டன் வீதி, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 6: பிரின்ட் கிராப்பிக்ஸ், 4, நெல்சன் பிளேஸ்).
xii, 44 பக்கம், தகடுகள், விலை: ரூபா 60., அளவு: 21×14 சமீ.
இந்நூல் தேவாரந் தந்த இராஜராஜன், இராஜராஜனும் கோயில்களும், இராஜராஜனும் கலை வளர்ச்சியும், இராஜராஜனின் சமூகப்பணி, இராஜராஜனும் இலங்கையும், இராஜராஜனும் நாமும் ஆகிய ஆறு அத்தியாயங்களின்கீழ் எழுதப்பட்டுள்ளது. சோழ அரசர் சங்ககாலத்திலிருந்தே தமிழ்நாட்டில் சில பிரதேசங்களை ஆண்டு வந்துள்ளனர். கி.பி. 985-1014 காலகட்டத்தில் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்த இராஜராஜசோழன் தனது சிறந்த நிர்வாகம், அரசியற்றிறன், படைத்திறன் ஆகியவற்றால் இந்தியாவிலும் இலங்கையிலும் தனது ஆட்சியைப் பரப்பியதுடன் சைவசமயத்தையும் கலைகளையும் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டிருந்தான். இம்மாமன்னன் காலத்தில் தஞ்சையில் சிவனுக்கு எழுப்பிய இராஜராஜேஸ்வரம் கோயில் இன்றும் அவன் பெருமைகூறுகின்றது. இராஜராஜன், தில்லைக்குச் சென்று அரும்பாடுபட்டுக் கிடையிற் கிடந்த தேவாரங்களைப் பெற்று நம்பியாண்டார் நம்பி மூலம் அவற்றைத் திருமுறைகளாகத் தொகுப்பித்தான் என்பதும் வரலாறு. அத்துடன் கோவில்களில் அவற்றை ஓதுவதற்கு ஓதுவார்களையும் நியமித்து திருமுறைகளின் பெருமையை போற்றியவனும் அவனே. அத்தகைய மன்னனின் வாழ்க்கை வரலாறும் அவனது பணிகளும் இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17241).