மா.க.ஈழவேந்தன் (இயற்பெயர்: கனகசபாபதி கனகேந்திரன்). திருக்கோணமலை: ந.சிறீகாந்தா, 56, சுங்க வீதி, 1வது பதிப்பு, 1980. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்).
12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.
கோணமாமலையைச் சூழ்ந்துள்ள கொடுமைகள் பாரீர், துடித்தெழுந்து துன்பம் துடைக்க வாரீர். இன்றேல் ஒப்பற்ற திருக்கோணமலையை இழந்து ஒப்பாரி வைக்கும் நிலை உருவாகும். எம் வழித் தோன்றல்கள் எம்மீது வசைபாட வரலாறு பழிசுமத்த இடம்கொடுக்கப் போகிறோமா? என்று கேள்வி எழுப்பும் ஈழவேந்தன், தமிழீழ விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளராக இயங்கிய வேளையில் இந்நூலை எழுதியிருந்தார். ஈழவேந்தன் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழீழக் கொள்கையில் மிகவும் பிடிப்புள்ளவராக இருந்த இவர் தனது பெயரை ஈழவேந்தன் என மாற்றிக் கொண்டார். இலங்கை மத்திய வங்கியில் சிலகாலம் பணியாற்றிய பின்னர் பொருளாதார ஆய்வுத் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி 1980 இல் ஓய்வு பெற்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சியில் முக்கிய உறுப்பினராக இருந்த இவர் 1970 ஆம் ஆண்டில் வி. நவரத்தினம் தொடங்கிய தமிழர் சுயாட்சிக் கட்சியில் இணைந்தார். பின்னர் சில காலங்களின் பின் தமிழரசுக் கட்சியில் மீண்டும் சேர்ந்தார். தமிழரசுக் கட்சி அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக இருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொழும்புக் கிளைக்கு ஈழவேந்தன் தலைவராக இருந்து பணியாற்றினார். 1977 வன்முறைகளில் இவர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டில் வேறு சிலருடன் இணைந்து தமிழரசுக் கட்சியிலிருந்து விலகி, தமிழீழ விடுதலை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து அக்கட்சியின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இலங்கையில் தமிழருக்கு எதிரான வன்முறைகள் கிளம்பிய காலகட்டத்தில் 1981 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாட்டுக்கு சென்றார். விடுதலைப் புலிகளுக்கு மருந்துகள் கொள்வனவு செய்தனர் என்ற குற்றச்சாட்டில் இவரும் வேறும் நால்வரும் 1997 பெப்ரவரியில் சென்னையில் கைது செய்யப்பட்டனர். 1999 ஆம் ஆண்டில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். ஈழவேந்தன் 2000 டிசம்பர் 4 இல் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றத்துக்குச் செல்லாமல் விட்டதை அடுத்து இவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி 2007 நவம்பரில் பறி போனது. பின்னர் ஈழவேந்தன் இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து கனடாவுக்குப் புலம் பெயர்ந்தார். 2010 மே மாதத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2587).