றமீஸ் அப்துல்லா (பிரதம பதிப்பாசிரியர்), ஐ.எம்.இப்றாஹிம், அஷ்ஷேஹ் ஏ.சீ.ஏ.எம். புஹாரி, எம்.ஐ.எம்.சாக்கீர் (பதிப்புக் குழு). சம்மாந்துறை: சம்மாந்துறை வெளியீட்டுப் பணியகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxxiv, 810 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: ரூபா 2000., அளவு: 25×18 சமீ., ISBN: 978-624-5161-00-3.
சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். புவியியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை, இப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாகக் கணிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள். வேளாண்மை, கல்வி, கலாச்சாரம், மார்க்க போதனை, அரசியல் ஆகியவற்றிலே முதனிலை அடைந்த ஊர் இது. இத்தகைய வளம்மிக்க சம்மாந்துறை பற்றிப் புலமை நோக்கிலும் தெளிவான, இலகுவான நடையிலும் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சம்மாந்துறையின் இயற்கை வளங்களும் சமூக நிலைகளும், நவீனகால அரசியல் வரலாறும் நிர்வாக முறையும் இதிலே விளக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், சுகாதார அமைப்புகள், இஸ்லாமிய சமய நிறுவனங்கள், பண்பாட்டு அம்சங்கள், தமிழ் இலக்கியம், வாய்மொழிப் பாடல்கள் ஆகிய எல்லாவற்றைப் பற்றியும் விரிவாக எழுதியுள்ளனர். இந்நூல் ஊரும் மக்களும், அரசியல் நிர்வாக முறைமையும் ஆட்சி பரிபாலனமும், பொருளாதாரமும் நிதியமைப்புக்களும், உலகியல் கல்வியும் ஆத்மீகக் கல்வியும், வாழ்வியல் பண்பாடும் விளையாட்டு அம்சங்களும், கலை இலக்கியப் பாரம்பரியமும் தொடர்பாடலும், பாரம்பரிய வைத்தியமும் மேலைத்தேய வைத்திய வளர்ச்சியும், ஊரும் பொது நிறுவனங்களின் வளர்ச்சியும், சம்மாந்துறையும் முதன்மைகளும் ஆகிய ஒன்பது பிரிவுகளில் இந்நூல் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.