என்.கே.எஸ்.திருச்செல்வம். கொழும்பு: அகில இலங்கை இந்து கலாசாரப் பேரவை, 2வது பதிப்பு, ஜனவரி 2018, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 75 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ.
அகில இலங்கை இந்து கலாசாரப் பேரவையின் செயலாளரான என்.கே.எஸ். திருச்செல்வம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் கற்றுத்தேர்ந்தவர். இலங்காபுரிச் சக்கரவர்த்தியாகிய இராவணன் தொடர்பாக அறியப்பட்டுள்ள 60 பிராமிக் கல்வெட்டுகளில், கிடைக்கப்பெற்ற 34 கல்வெட்டுகளைஆய்வுசெய்து இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் அண்மைக்கால தொல்லியல் ஆய்வுகள், இராவணனும் இராமாயணமும் பிராமிக் கல்வெட்டுகளும்-ஓர் அறிமுகம், இராவணனின் காலமும் இலங்கை பிராமிக் கல்வெட்டுகளின் காலமும், இராவணன் மற்றும் அவனுடன் தொடர்புடையவர்களின் பெயர்களை கல்வெட்டுகளில் பொறித்தவர்கள் யார்?, இலங்கையில் சிவவழிபாட்டைத் தோற்றுவித்த இராவணனை மறந்த தமிழர்கள், கண்டுபிடிக்கப்படாத அல்லது காட்டில் மறைந்து கிடக்கும் பிராமிக் கல்வெட்டுகள் ஆகியன முதலாம் அத்தியாயத்திலும், இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் இராவணன் என்ற இரண்டாம் அத்தியாயத்தில் பம்பரகஸ்தலாவ, மிரஹல, கொத்மலை, ரஹலகல, கெசெல்பொத்த, வலஸ்கெவுனுவெவ, ரன்கிரி விகாரை, வெஸ்ஸகிரி, உறுகாமம், கபுரெல்ல, ஹொரவப்பொத்தான, ஈருப்பொத்தான, வேகிரிய, கரதஹெல, ராக்ஷஹெல, பின்னவல, சீகிரியா, அலுலேன, அட்டுகொட, நிசோலேன, கோமரிகாகல, திவேல, ஓலகம்கல, ஆகிய பிரதேசங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் பற்றியும், மறைக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பற்றியும் பல சுவாரசியமான வரலாற்றுத் தகவல்களை வழங்கியுள்ளார். அத்தியாயம் மூன்றில் பிற்சேர்க்கைகளாக இலங்கை பிராமிக் கல்வெட்டுகளில் தமிழும் தமிழரும், பிராமிக் கல்வெட்டுகளில் பருமகன் எனும் தமிழ்ச்சொல், தமிழ் ‘தமெத” எனப் பொறிக்கப்பட்டுள்ள பிராமிக் கல்வெட்டுகள், பெரியபுளியங்குளம் கல்வெட்டு, சேருவில கல்வெட்டு, குடிவில் கல்வெட்டு, அனுராதபுரம் கல்வெட்டு ஆகியனவும் விளக்கப்பட்டுள்ளன.