கவிராஜவரோதயன் (மூலம்), இ.குகதாசன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: அமரர் வேலுப்பிள்ளை பூவிலிங்கம் நினைவு வெளியீடு, 100, இராமநாதன் வீதி, நாயன்மார்கட்டு, 1வது பதிப்பு, மே 1993. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், காங்கேசன்துறை வீதி).
(2), 46 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
இலங்கையின் திருகோணமலையில் உள்ள திருக்கோணேச்சர ஆலயத்துக்கு திருப்பணிகள் செய்த குளக்கோட்ட மன்னன், இந்த ஆலயம் பற்றிய தகவல்களையும், அதன் நிர்வாக முறைகள், கோயில் பக்தர்களின் கடமைகள் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி ‘பெரியவளமை பத்ததி’ என்னும் செப்பேட்டில் பதிவு செய்து வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன. அந்த சாசன தகவல்களை அடிப்படையாக கொண்டு, கவிஞர் கவிராஜவரோதயரால் தொகுத்து வழங்கப்பட்டதே கோணேசர் கல்வெட்டு என அழைக்கப்படுகிறது. திருக்கோணமலையினதும், கோணேசர் ஆலயத்தினதும் வரலாற்று அம்சங்களை ஓரளவு விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது. குளக்கோட்டன், கயவாகு, ஆகிய மன்னர்களின் அரும்பணிகள் பற்றியும், திருக்கோணமலையில் வாழ்ந்த இந்த மக்களின் சமூக வாழ்வு, ஆலயப்பணிகளுக்கென தமிழகத்திலிருந்து பல பிரிவினர் அழைக்கப்பட்டுக் குடியேற்றப்பட்டமை பற்றியும் இந்நூல் விளக்குகின்றது. 13.04.1993 அன்று அமரத்துவமடைந்த வேலுப்பிள்ளை பூவிலிங்கம் அவர்களின் நினைவு வெளியீடாக 26.05.1993 அன்று வெளியிடப்பட்டது.