என்.செல்வராஜா. லண்டன்: யாழ்.தீவக ஒன்றியம், பிரித்தானியா, 2வது பதிப்பு, மே 2018, 1வது ஜேர்மன் பதிப்பு, செப்டெம்பர் 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
v, 129 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978-0-9930143-5-2.
தாம் பிரிந்துவந்த மண்ணின் நினைவுகளை பிரதேச வரலாறுகளாகப் பதிவுசெய்யும் நடைமுறை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் நீண்டகாலமாகவே இருந்து வந்துள்ளது. அதே வேளை உள்ளக இடப்பெயர்வுகளால் தாம் இழந்த மண் பற்றிய துயரப் பதிவுகளை மேற்கொண்டு வரலாறாக்கும் பணிகளும் அண்மைக் காலத்தில் தாயகத்தில் முனைப்புப்பெற்று வந்திருக்கின்றன. பிரதேச வரலாறென்பது வளர்ந்துவரும் ஒரு ஆய்வுப்பரப்பாக மாறிவிட்டதெனலாம். இன்று நமது புகலிடங்களில் உருவாக்கப்பட்டு இயங்கிவரும் கோவில்கள் கூட, தாயகத்துக் கோயில்களின் நினைவுகளைத் தாங்கியே இயங்குவதை ஆழ்ந்து அவதானிக்க முடிகின்றது. ஆங்காங்கே உருவாக்கப்பட்டு, ஆண்டுதோறும் சந்திப்பு நிகழ்வுகளை மேற்கொண்டு கூடிப் பேசிப் பிரியும் ஊர்ச் சங்கங்கள் கூட, பிரதேச வரலாற்றின் கூறுகளாகவே அமைகின்றன. அவை அவ்வப்போது வெளியிடும் மலர்களும் அவ்வப் பிரதேசத்தின் வரலாற்றுப் படிமங்களாகவே காணப்படுகின்றன. பாடசாலை பழைய மாணவர் சங்கங்களும் இந்த வகைக்குள் அடங்குகின்றன. இன்று ஈழத்தமிழர்களால் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்டுவரும் பிரதேச வரலாற்றுக் கூறுகளைத் தொகுத்துப் பகுத்துப் பார்ப்பதே ஒரு வரலாற்று ஆவணமாகி விடும். அத்தகையதொரு விரிந்த தேடலுக்குமுன்னோடியாக, தனிப்பட்டசில பிரதேச வரலாற்றுக் கூறுகளை இனம்காண ஆய்வாளர்களுக்கு உதவும் வகையில் இந்தக்கட்டுரைத் தொடர் அமைகின்றது. இத் தொடரில் குறிப்பாகத் தீவகம் பற்றி ஈழத்தில் இதுவரை எழுந்தவையும், ஆசிரியரின் பார்வைக்குக் கிட்டியவையுமான நூல்களையே பயன்படுத்தியிருக்கின்றார். ஒவ்வொரு இயலிலும் குறிப்பிடப்பட்ட நூல்களின் நூலியல் விபரம், வாசகரின் ஆய்வுத்தேடலுக்கான விரிவான வகையில் ஒவ்வொரு இயலின் இறுதியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆசிரியரின் 46ஆவது நூலாகும். (முன்னைய பதிப்பிற்கான நூல்தேட்டம் பதிவிலக்கம் 11986).