ராஜீவ் சர்மா (ஆங்கில மூலம்), ஆனந்தராஜ் (தமிழாக்கம்). சென்னை 600 001: சவுக்கு பதிப்பகம், 5, 4-ஆவது தளம், சுங்குராம தெரு, 2வது பதிப்பு, டிசம்பர் 2011, 1வது பதிப்பு, மே 2011. (சென்னை 600 014: ராகாஸ், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை).
460 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 300., அளவு: 23×16 சமீ.
1991 மே 21 ம் திகதி ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொலைசெய்யப்பட்டதன் பின்னர் சி.பி.ஐ மேற்கொண்ட விசாரணைகளில் உள்ள நியாயத்தன்மைகளை கேள்விக்கு உள்ளாக்கும் மற்றுமொரு நூல். ராஜீவ் காந்திக்கு நிகழ்ந்தது ஏதோவொரு ‘கொலை’ என மட்டுமே பரப்பப்பட்டு, அக்கோணத்திலேயே திரும்பத் திரும்ப பேசியே இறுதியில் பழிவாங்குதல் வரை சென்றது. ஆனால், இது தனிநபர் விருப்பு வெறுப்பு சார்ந்த பழிவாங்கல் என்கிற புரிதல் மட்டுமே ஏற்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், முற்றிலும் புதிதாக வேறு ஒரு கோணத்தில் இந்நூல் ‘இது ஒரு அரசியல் படுகொலை’ என்று காரண காரியங்களுடன் விளக்குகின்றது. அரசியல் படுகொலை என்றால் என்ன? அதன் ஆழ அகலங்கள், சூட்சுமங்கள், சதிகள், நுணுக்கங்கள், வலைப்பின்னல்கள், துரோகங்கள், மேலாதிக்கக் கூட்டுச் சதிகள், உலகளாவிய ஆயுத பேரங்கள், இவை அனைத்தும் ஒரு சிறந்த இசைத் தொகுப்பைப் போல மிகத் தெளிவாக, மிகக் கோர்வையாக, எளிமையாகப் புரியும்வகையில் வார்க்கப்பட்ட அரசியல் கொலைச் சிந்து எனலாம்.