எஸ்.தில்லைநாதன். கொழும்பு: வீரகேசரி பிரசுரம், த.பெட்டி 160, 1வது பதிப்பு, மார்ச் 2014. (கொழும்பு 14: எக்ஸ்பிரஸ் நியுஸ்பேப்பர்ஸ் லிமிட்டெட், 185 கிராண்ட்பாஸ் வீதி). xvii, 226 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24X16.5 சமீ., ISBN: 978-955-0811-07-6. ரயில்வே திணைக்களத்தில் ஒரு பதவியை ஏற்பதற்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் தற்செயலாகத் தனது உறவினர் ஒருவரின் மூலம் வீரகேசரி பத்திரிகையில் நிருபராக இணையும் வாய்ப்பினை 1962இல் பெற்றவர் தினகரன் பிரதம ஆசிரியர் கலாபூஷணம் எஸ்.தில்லைநாதன். அன்று வீரகேசரி இணை ஆசிரியராக இருந்த பத்திரிகையாளர் எஸ்.டி.சிவநாயகம் அவர்களையே இவரது ஊடகத்துறை குருவாகக் கருதுகிறார். அவரது ஆலோசனையின் பேரிலேயே பாராளுமன்ற செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றத் தலைப்பட்டவர் இவர். இவரது வழிகாட்டிகளாக வீரகேசரி இணை ஆசிரியர் அமரர் ஈ.வி.டேவிட் ராஜு, முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் எஸ் நடராஜா, வீரகேசரியின் சிரேஷ்ட பத்திரிகையாளர் எஸ்.தியாகராஜா ஆகிய மூவரையும் குறிப்பிடும் திரு. தில்லைநாதன் அவர்கள் இந்நூலில் தான் பாராளுமன்ற செய்திச் சேகரிப்பின் போது பெற்றுக்கொண்ட அனுபவங்களையும் கண்டறிந்த வரலாற்று முக்கியத்துவமானதும் சுவையானதுமான செய்திகளையும் 39 அத்தியாயங்களில் பகிர்ந்து கொள்கிறார். அமைச்சர் திருச்செல்வத்தின் கழுத்தை பிரதமர் டட்லியின் எதிரிலேயே நெரித்த திஸ்ஸமஹாராமை எம்.பி. சார்ளி எதிரிசூரியா பற்றியும், மாவட்டசபை முரண்பாட்டில் பதவியை ராஜினாமா செய்ய முன்வந்த பா.உ. திருச்செல்வம் பற்றியும், சுவிஸ் வங்கி பற்றி எழுதியதால் தான் சீ.ஐ.டி. விசாரணைக்கு உட்பட்டது பற்றியும், டாக்டர் தஹாநாயக்கா ஓரிரவில் பல அமைச்சர்களை பதவிநீக்கம் செய்து சாதனை படைத்தது பற்றியும், எம்.ஜி.ஆர். சரோஜா தேவியுடன் வீரகேசரி அலுவலகத்துக்கு வந்தமை பற்றியும் என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இந்நூலில் சுவையாக பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன.