கலைவாணி இராமநாதன் (பிரதம ஆசிரியர்), இரா.கோபாலகிருஷ்ணன், எஸ்.கெங்காதரன் (இணைஆசிரியர்கள்). கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx, 387 பக்கம், விலை: ரூபா 1500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0881-28-4. இந்து இலக்கியங்களை ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்ட நூல் இதுவாகும். இந்துக்களின் அற ஒழுக்கக் கோட்பாடு, வடமொழி சமய இலக்கியங்களில் அறவியல் சிந்தனைகள், தமிழ் இலக்கியங்களில் அறவியல் கோட்பாடுகள், சங்க இலக்கியத்தில் அன்பு நெறியும் அறநெறியும், அற ஒழுக்க நியமங்களில் திருமந்திரத்தின் வகிபாகம், அவைதிக சமயங்களில் அறக்கருத்துக்கள், இந்து அற வாழ்வில் பக்தியும் ஒழுக்கமும், இந்து ஆலயங்களும் அறப்பணிகளும், கன்மக் கொள்கையும் அறநெறிக் கொள்கையும்: சைவசித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது, மெய்கண்ட சாஸ்திரங்களில் அறநெறியும் அன்பு நெறியும், நவீன அறவியற் செல்நெறியில் மேனாட்டு சிந்தனை வளர்ச்சி, சித்தர்களும் பொதுவுடைமை அறமும் ஆகிய பன்னிரண்டு இயல்களில் இந் நூல் எழுதப்பட்டுள்ளது. பேராசிரியர் கலைவாணி இராமநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஓய்வுநிலைப் பேராசிரியர். அப் பல்கலைக்கழகத்தில் இந்து நாகரிகத்துறையின் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் முதலாவது பெண் பேராசிரியர் என்ற பெருமையைப் பெற்றவர். சைவசித்தாந்த ஒழுக்கவியல் அடிப்படைகள், சைவசித்தாந்த மெய்ப் பொருளியல், வேத பாரம்பரியமும் சைவ சித்தாந்தமும் ஆகியன இவரது குறிப்பிடத்தகுந்த பிற நூல்கள். பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதுடன் சைவ சித்தாந்தத்தில் சிறப்பாகப் பல ஆய்வுகளையும் மேற்கொண்டவர் இவராவார். இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 3 வருடங்களுக்கு மேலாக கலாநிதிப் படிப்பிற்கான ஆய்வினையும் மேற்கொண்டிருந்தார்.