என்.கே.எஸ்.திருச்செல்வம். கொழும்பு 2: அகில இலங்கை இந்து மாமன்றம், இல. 91/5, சிற்றம்பலம் ஏ.கார்டினர் மாவத்தை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xx, 426 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், விலை: ரூபா 800., அளவு:21.5×14.5 சமீ. தென்கிழக்கிலங்கையின் இந்துப் பாரம்பரியத்தைப் பற்றிக் கூறும் இவ்வாய்வு இப்பிரதேசத்தின் சைவ ஆலயங்களையும், பிராமிக் கல்வெட்டுகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இலங்கையின் சைவம் சார்ந்த முதலாவது வரலாற்று நிகழ்வாகக் கருதப்படும் கந்தன் படையெடுப்புடன் (கி.மு.7000-10000 ஆண்டுகளுக்கிடையில் நிகழ்ந்தது) இப்பிரதேசம் தொடர்பு பட்டுள்ளமையால்தான் தென்கிழக்கிலங்கையில் முருக வழிபாடு மேலோங்கிக் காணப்படுகின்றது என்று கூறும் ஆசிரியர், பண்டைய காலம் முதல் கதிர்காமம், உகந்தை மலை, சங்கமன்கண்டி மலை, திருக்கோயில் போன்ற இடங்களில் முருகன் வழிபாடு சிறப்புற்று விளங்கியதென்பார். இவரது களஆய்வின்போது, இப்பகுதியின் புராதன தொன்மைமிகு தெய்வச்சிலைகள், ஐம்பொன் படிமங்கள், மற்றும் கல்வெட்டுக்கள், கருங்கற் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய தொல்பொருட் சின்னங்கள், புராதன கட்டிட இடிபாடுகள் போன்ற அரிய பொக்கிஷங்களைக் கண்டெடுத்து புகைப்படங்களின் வழியாக ஆவணப்படுத்தியுள்ளார். ஐதீகங்களுக்கும், கர்ணபரம்பரைக் கதைகளுக்கும் மாத்திரம் முன்னுரிமை வழங்காது, இவ்வாலயங்கள் பற்றிய ஆய்வுக்குறிப்புகள், இங்கு கிடைக்கப்பெற்ற தொல்பொருட் சின்னங்கள் ஆகியவற்றுக்கே இங்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இவ்வாய்வு தென்கிழக்கிலங்கையின் பூர்வீகம், தென்கிழக்கிலங்கையின் பண்டைய இராச்சியங்கள், தென்கிழக்கிலங்கையின் பெருங்கற்கால (ஆதி இரும்புக்கால) பண்பாட்டு தொல்பொருள் மையங்கள், தென்கிழக்கிலங்கையின் பண்டைய கிராமங்களும் குடியேற்றங்களும், பிராமிக் கல்வெட்டுக்கள், புராதன கோயில்கள், இந்துக்களின் (தமிழர்களின்) பாரம்பரிய சொத்துக்கள் ஆகிய ஏழு அத்தியாயங்களில் புகைப்படச் சான்றுகளுடன் எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் 59 கோயில்கள் பற்றிய விபரங்களை எழுதியுள்ளார். தென்கிழக்கிலங்கையில் இருந்த பண்டைய பத்து இந்து இராச்சியங்களையும், ஒன்பது பெருங்கற்கால தொல்லியல் மையங்களையும், 36 பண்டைய இந்துக் கிராமங்களையும் சைவசமயம் பற்றிக் கூறும் 105 பிராமிக் கல்வெட்டுக்கள் பற்றியுமான தகவல்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகின்றது இவ்வாய்வு. என்.கே.எஸ்.திருச்செல்வம், சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பட்டதாரியாவார்.