திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2014. (யாழ்ப்பாணம்: ரூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை). 52 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 18.5×12.5 சமீ. சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது பிரதோஷ விரதம். தோஷம் என்றால் குற்றம் என்றும், பிரதோஷம் என்றால் குற்றமற்றது என்றும் பொருள் தரும். மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான காலம் பிரதோஷ காலமாகும். இதை சந்தியாகாலம் என்றும் அழைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் வளர் பிறை தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும், திரியோதசி திதியில் வருவது பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம். பிரதோஷ வேளையில் இறைவனை வழிபடுவதால் நமது முற்பிறவி குற்றங்கள், சகல தோஷங்கள் நீங்கி நலம் கிடைக்கும். பாவம் விலகி புண்ணியம் சேரும். வறுமை அகலும். பயம், மரண வேதனை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மகப்பேறு பெறுவர். பிறவி ஒழித்து முக்தி பேற்றினை அடைவர். கல்வியில் மேன்மை பெறுவர் என்று பல்வேறு நம்பிக்கைகள் சைவர்களின் மத்தியில் காணப்படுவதால் இவ்விரதம் முக்கியமானதாகப் போற்றப்படுகின்றது. இந்நூல், பிரதோஷ வழிபாடு, பிரதோஷ வரலாறு, பிரதோஷ வழிபாட்டு முறையும் பலன்களும், நந்திதேவர் வணக்கம், சிவலிங்க வழிபாடு, நடராஜ பத்து, திருப்பதிகங்கள், சிவபுராணம், 2014ஆம் ஆண்டுக்குரிய பிரதோஷ விரத நாட்கள் ஆகிய ஒன்பது தலைப்புகளின்கீழ் இச்சிறுநூல் பிரதோஷ விரதம் பற்றிய பல்வேறு பயனுள்ள தகவல்களை வழங்குகின்றது. இந்நூலாசிரியர் சுழிபுரம் யாழ்/விக்டோரியாக் கல்லூரியின் ஆசிரியராவார்.