என்.கே.எஸ். திருச்செல்வம். கொழும்பு 5: அருந்ததி பதிப்பகம், 68/14, ஸ்ரீ சித்தார்த்த வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). x, 55 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-3726-02-5. பண்டைய காலம் முதல் தமிழ் மன்னர்களும், பௌத்த சிங்கள மன்னர்களும், அரச பிரதானிகளும் கட்டிய கோயில்களை ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர்தான் பெருமளவில் அழித்தார்கள் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. வடக்கிலும் கிழக்கிலும் இவர்கள் அழித்த கோயில்கள் ஆயிரத்துக்கும் மேல் எனக் குறிப்பிடும் ஆசிரியர் இந்நூலில் குறிப்பாக போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட 700 வருட வரலாற்றைக் கொண்ட பெந்தோட்டை காளி கோயில் பற்றிக் கூறமுற்படுகின்றார். 12ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் 400 ஆண்டுகளின் பின் 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. அதன் பின் 300 வருடங்கள் கழிந்த நிலையில் சிதைந்து கிடந்த இக்கோயிலை மீள்நிர்மாணம் செய்ய 1884இல் ஆர்த்தர் ஜெயவர்த்தனா என்ற ஆராய்ச்சியாளர் மேற்கொண்ட முயற்சியும் தோல்வியடைந்தது. இன்றும் இக்கோயில் அழிவுற்ற நிலையிலேயே காணப்படுகின்றது. பெந்தோட்டை காளி கோயிலின் அமைவிடமும் அதன் தொன்மையும், பெந்தோட்டை காளி கோயிலைக் கட்டிய மன்னர்களும் திருப்பணிகளும், பெந்தோட்டை காளி கோயிலை முற்றாக இடித்து அழித்த போர்த்துக்கேயர், பெந்தோட்டை காளி கோயிலின் தொல்பொருள் சின்னங்கள், சர்வதேச நூல்களில் பெந்தோட்டை காளி கோயில், பெந்தோட்டையில் தமிழர் தொடர்பான கல்வெட்டு, பெந்தோட்டையில் விநாயகர் மற்றும் விஷ்ணு வழிபாடு, பெந்தோட்டை காளி கோயிலை மீண்டும் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சி, பெந்தோட்டை காளி கோயில் மீண்டும் கட்டப்பட வேண்டும் ஆகிய அத்தியாயங்களின் கீழ் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது.