நா.கதிரைவேற்பிள்ளை (மூலம்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). பருத்தித்துறை: பருத்தித்துறை நண்பர்கள், கல்வி, சமூக நலன்சார் அமைப்பு, 2வது பதிப்பு, ஓகஸ்ட் 2017, 1வது பதிப்பு, 1896. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxiv, 104+10 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-7347-01-1. சிவஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம் என்ற இந்நூல், நல்லை நகர் ஆறுமுகநாவலரின் மாணவ பரம்பரையைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மேலைப்புலோலி நா.கதிரைவேற்பிள்ளை (1871-1907) அவர்களால் இயற்றப்பட்டு சென்னை, மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலையில் துர்முகி ஆண்டு ஆனி மாதம் (1896) அச்சிட்டு வெளியிடப்பட்டிருந்தது. மீண்டும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான தி.செல்வமனோகரன் அவர்களால் இந்நூல் 2017இல் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளது. இம்மீள்பதிப்பின் முதற் பகுதியில் வெளியீட்டுரை, அணிந்துரை, முன்னுரை, சிறப்புப் பாயிரம் என்பனவும், இரண்டாம் பகுதியில் நா.கதிரைவேற்பிள்ளை அவர்களின் சிவஷேத்திராலய மகோற்சவ உண்மை விளக்கம், சிவ விளக்கம், ஷேத்திராலய விளக்கம், மகோற்சவ விளக்கம் என்பனவும், மூன்றாவது பகுதியில் பின்னிணைப்புகளாக கதிரைவேற்பிள்ளையும் காலப் பின்புலமும், கதிரைவேற்பிள்ளையின் வகிபாகம் ஆகிய விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பருத்தித்துறை நண்பர்கள், கல்வி, சமூக நலன்சார் அமைப்பு, தனது முதலாவது பிரசுரமாக இந்நூலை வெளியிட்டுள்ளது.