நா.சுப்பிரமணியன். சென்னை 600017: கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2002. (சென்னை 600021: சக்தி பிரின்டர்ஸ்). 320 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12 சமீ. காஞ்சீபுரம் குமரகோட்டத்து அருச்சகரான கச்சியப்ப சிவாசாரியார் வடமொழியில் எழுதப்பட்டிருந்த ‘ஸ்காந்த புராணம்” என்ற நூலைத் தழுவித் தமிழில் எழுதிய கந்தபுராணம் என்ற பேரிலக்கியம் பற்றிய திறனாய்வு நிலையிலான அறிமுக நூல் இது. கந்தன் எனப்படும் முருகப் பெருமானைத் தலைமைப் பாத்திரமாகககொண்டு அவரை சிவபெருமானின் அம்சமாகக் காட்டுவதால் சைவ நூலாக அமைந்த இவ்வாக்கம் புராணப்பண்பு, காவியப்பண்பு என்பவற்றின் கலவையாக அமைந்ததாகும். சமயம் என்ற எல்லைக்கு அப்பால் சமூகம் சார்ந்த பொது மானுடத்தின் வாழ்வியல் நெறிகளையும் உணர்த்துவதால் இது ஒரு வாழ்வியல் நூலாகின்றது. இந்திய மண்ணின் ஒரு காலகட்டத்து கலை மற்றும் அறிவியல், பழக்க வழக்கங்கள் முதலியவற்றையும் பதிவு செய்வதால் இது பண்பாட்டுக் களஞ்சியமாகவும் மதிக்கப்பெறுகின்றது. அறிமுகம், தக்கன் கதை-ஒரு அதிகார நாடகம், அவுணர் எழுச்சி-ஒரு பழிவாங்கு படலம், ஒரு திருமுருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய, தூதும் அமைச்சியலும்-ஒரு தத்துவ விவாத மேடை, கச்சியப்பர் காட்டும் போர்க்களம்-புறப்போரும் அகப்போரும், மணமங்கலம்- மரபுசார் சில பதிவுகள், கிளைக் கதைகள், சிறப்புச் செய்திகள்-பண்பாட்டுக் கோலங்களின் பதிவுகள், நிறைவாக ஆகிய பத்து இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 30991).