யாழ்ப்பாணம்: அம்பிகா பான்ஸி றேடர்ஸ், 9, நவீன சந்தை, 1வது பதிப்பு, நவம்பர் 1986. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம், 575, காங்கேசன்துறை வீதி).16 பக்கம், விலை: அன்பளிப்பு, அளவு: 18.5×12.5 சமீ. 1.11.1986 அன்று, வண்ணார்பண்ணை காமாட்சி அம்பாள் ஆலயத்தில் (நாச்சிமார் கோவில்), கேதாரகௌரி விரத நாளன்று அமரர்கள் சின்னையா முத்துக்குமாரு, செல்லம்மா முத்துக்குமாரு ஆகியோரின் ஞாபகார்த்தமாக அம்பிகா பான்சி றேடர்ஸ் வர்த்தக நிலைய உரிமையாளரால் வெளியிடப்பெற்ற சிறு நூல் இது. வரலாறும், விரதம் அனுஷ்டிக்கும் முறைகளும், பயன்களும் பற்றிய அறிமுகக் கட்டுரையுடன், கேதாரீஸ்வரர் விரத நோன்பு பூஜாவிதி, மந்திர சுலோக தோத்திரங்கள் என்பனவும் இதில் இடம்பெற்றுள்ளன. கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கேதாரம் என்பது இமயமலைசாரலைக் குறிப்பதாகும். மலையைச் சார்ந்த வயல் பகுதியை கேதாரம் என்பர். இந்த இமயமலைக் கேதாரப் பகுதியில் சுயம்பு லிங்கமாக கேதாரேஸ்சுவரர் தோன்றினார். சக்திரூபமான பார்வதி தேவி சிவனை நினைந்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரியாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரதமாகும். வயலில் ஆலமரத்தடியில் இருந்து இவ்விரதம் அனுஷ்டிக்கப்பட்டதால் கேதாரகௌரிவிரதம் எனவும் ஈசனை வழிபடுகின்ற படியால் கேதாரேஸ்வரி விரதம் எனவும் பெயர் பெறுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 003001).