கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், ஊசநயணந னுபைவையடஇ 14, அத்தபத்து டெரஸ்). X, 88 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-5222-05-6. இந்நூலில் ஆசிரியர் அவ்வப்போது எழுதியிருந்த சிவபுராணம் எனும் சைவ சித்தாந்தத் தேன், தமிழ் வேதம் தந்த கணபதி, திருவாசகத்தில் அன்புநெறி, திருமுறைகளில் திருநீறு, திருமந்திர விஞ்ஞானம் ஆகிய ஐந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ‘சிவபுராணம் எனும் சைவ சித்தாந்தத் தேன்” என்ற கட்டுரை சைவ சித்தாந்த நோக்கில் சிவபுராணத்தின் பெருமைகளை எடுத்தியம்புகின்றன. ஏனைய தத்துவ இலக்கியங்களுடன் ஒப்புநோக்கி இக்கட்டுரையை ஆசிரியர் படைத்துள்ளார். ‘தமிழ் வேதம் தந்த கணபதி” என்ற இரண்டாவது கட்டுரை திருநாரையூர் பொல்லாப் பிள்ளையாரைக் குறித்து நின்றாலும் இலக்கியங்களில் சுட்டப்படும் விநாயகர் பற்றிய செய்திகளைத் திரட்டித் தருகின்றது. ‘திருவாசகத்தில் அன்புநெறி” என்ற மூன்றாவது கட்டுரை தேனினிய திருவாசகத்தில் உள்ள பக்திநெறி பற்றிக் குறிப்பிடுகிறது. அன்புவாழ்வு தான் சைவநெறிநின்ற வாழ்வு, அன்பு நெறியே சைவநெறி என்பதைப் பொருத்தமான சான்றுகளுடன் கட்டுரையாளர் விளக்குகின்றார். ‘திருமுறைகளில் திருநீறு” என்ற கட்டுரை சிவசின்னங்கள் பற்றிய பெருமைகளை எடுத்தியம்புகின்றது. அவற்றுள் திருநீறு பெறும் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றது. ‘திருமந்திர விஞ்ஞானம்”என்ற இறுதிக் கட்டுரை விஞ்ஞான அணுகுமுறையுடன் திருமந்திரத்தை நோக்குகின்றது. திருமந்திரத்தை இயற்கை அறிவியலுடன் தொடர்புபடுத்தி பெருவெடிப்புக் கோட்பாடு, நிலைப்புக் கோட்பாடு, துடிப்புக் கோட்பாடு என்பவற்றைத் திருமந்திரம் ஊடாகத் தரிசிக்கிறார். நூலாசிரியரின் விஞ்ஞானப் புலமை இக்கட்டுரையின் செழுமைக்கு வாய்ப்பாகியுள்ளது.