கிஷாலி பின்ரோ ஜயவர்த்தன, லீசா கோயிஸ் (மூலம்), சட்ட சமுதாய அறநிலையம் (தமிழாக்கம்). கொழும்பு 8: சட்ட சமுதாய அறநிலையம், 3, கின்சி டெரஸ், 1வது பதிப்பு, ஜுன் 2008. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்). xxv, 77 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 25×18 சமீ., ISDN: 978-955-1302-13-9. இந்த ஆய்வு இலங்கையில் சித்திரவதைக்கும் கொடூரமானஃமனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் முறையில் நடாத்துகைக்கும் உட்படுத்தப்படாதிருக்கும் சுதந்திரத்திற்கான உரிமை தொடர்பில் நீதித்துறையின் எதிர்வினையை நுண்ணாய்வு செய்கின்றது. இது 2000-2006ஆம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் 11ஆம் உறுப்புரையின் சார்த்துரைக்கப்பட்ட மீறுகைகளுக்கு உயர் நீதிமன்றத்தின் நீதித்துறை எதிர்வினைக்கும் அத்துடன் 1994ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க சித்திரவதைக்கும் ஏனைய மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் முறையில் தண்டிக்கப்படுவதற்கும் எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் மேல் நீதிமன்றத்தின் நீதிமுறை எதிர்வினை பற்றிய பரிசீலனை ஒன்றுக்கும் அவற்றிற்கு இயைபான வழக்குத் தொடுத்தல் மற்றும் புலனாய்வு நடைமுறைகளுக்கும் பரந்தளவில் கவனம் செலுத்துகின்றது. அரசியலமைப்பு மற்றும் நியதிச் சட்டங்கள் சார்ந்த கடுமையான பாதுகாப்பு இருந்தபோதிலும் கூட இலங்கையில் சித்திரவதை, கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவுபடுத்தும் முறையில் நடாத்தப்படும் நடவடிக்கைகள் ஏன் நாடப்படுகின்றன என்பதையிட்டு இந்த ஆய்வு கேள்விக் கணைகளைத் தொடுக்கின்றது. இங்கு ஒருசில சூன்ய நிலைகள் இலகுவில் இனம் காணக்கூடியவையாக உள்ளன. சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகள் (உதாரணம்- பொலிஸ்) நீதிமன்றத் தீர்ப்புகளை பாரதூரமானவையாகக் கருதுவதில்லை என்ற யதார்த்தம் இனம் காணப்படக்கூடிய ஒரு பிரச்சினையாகும். மனித உரிமை மீறல்களில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட பொலிஸ் அலுவலர்களான தனிநபர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை விதிக்கப்படுவதில்லை. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற மேற்பார்வை செய்யும் முகவராண்மைகள் இவ்விடயங்களையிட்டு பயனுறுதியுடன் செயற்படவில்லை என்பதும் வெளிப்படை. அரசியலமைப்பின் 17ஆம் திருத்தத்தில் விதித்துரைக்கப்பட்டவாறு அரசியலமைப்புப் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட அரசியலமைப்புரீதியிலான பணிப்பாணை இல்லாமல் ஜனாதிபதியால் செய்யப்படும் அவற்றின் உறுப்பினர்களின் நியமனத்தின் விளைவாக அண்மைக்காலத்தில் அவர்களது சுதந்திரமும் நேர்மையும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளன. இவ்விடயங்களை இவ்வாய்வு விரிவாக முன்வைக்கின்றன.