14344 முள்ளிவாயக்கால் பதிவுகள் Stories of Mullivaikkaal.

அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம். யாழ்ப்பாணம்: அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம், இல. 70, மணல்தரை ஒழுங்கை, திருநெல்வேலி, 1வது பதிப்பு, மே 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை). 126 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ. அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையத்தின் இச்செயற்றிட்டம் இறுதி யுத்தத்தின் பேரழிவுக்கு முகம்கொடுத்த மக்களின் அனுபவங்களையும் அவர்களை வெறுமனே பாதிக்கப்பட்டோர் என்ற கோணத்தில் அணுகாமல் அவர்களின் சுயத்திற்கு மதிப்பளித்து அப்பேரழிவிலிருந்து அவர்கள் மீண்டு வருவதில் எதிர்நோக்கும் சவால்கள், போராட்டங்களையும், அவற்றை எதிர்கொள்ளும் அவர்களின் ஓர்மத்தையும் பதிவுசெய்ய முயற்சிக்கின்றது. இத்தொடரானது போரின் இறுதி நாட்களில் தப்பிப் பிழைத்தோரின் போராட்டங்கள் மற்றும் மீண்டெழும் ஓர்மம் தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டுவருகின்றது. போரினால் பாதிப்புற்ற மக்களுக்கு உதவுவது தொடர்பிலான பரந்த கருத்தாடலுக்குஇது வழிவகுக்கின்றது. இதிலுள்ள கதைகள் அரைக் கட்டமைக்கப்பட்ட (ளநஅளைவசரஉவரசநன) நேர்காணல் முறைமூலம் பெறப்பட்டவை. இக்கதைகள் நேர்காணலில் பெறப்பட்ட தகவல்களுக்கு உண்மையாக இருப்பதுடன் எதுவிதமான தகவல்களோ கற்பனைகளோ சோடனைகளோ சேர்க்கப்படவில்லை. முதல் ஒன்பது நேர்காணல்களும் ஆங்கில மொழிமாற்றம் செய்யப்பட்டவை. பின்னைய ஒன்பது நேர்காணல்களும் தமிழ்மொழி மூலத்தில் தரப்பட்டுள்ளன. ஷாலினியின் கதை, வாசுகியின் கதை, கமலாவின் கதை, சாந்தியின் கதை, சிவநாதனின் கதை, தீபாவின் கதை, மேரியின் கதை, அன்னலட்சுமியின் கதை, மீராவின் கதை ஆகியவை இந்நூலில் பதிவுக்குள்ளாகியுள்ளன. முள்ளிவாய்க்கால் பதிவுகள் செயற்றிட்டமானது தர்ஷா ஜெகதீஸ்வரன், அனுஷானி அழகராஜா ஆகியோரினால் வடிவமைக்கப்பட்டு, திட்டமிடப்பட்டதுடன், பேரழிவினூடாக வாழ்ந்தவர் களுடனான நேர்காணல்களும் அவர்களாலேயே மேற்கொள்ளப்பட்டன. தர்ஷா ஜெகதீஸ்வரன் கீர்த்திகா உமாசுதன் ஆகியோர் நேர்காணல்களுக்கு எழுத்துரு வழங்கியுள்ளனர். இவற்றை திருத்துவதிலும் இற்றைப்படுத்துவதிலும் அபிநயா குமரகுருநாதன், அகில் குமாரசுவாமி ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். தேவைப்படும் இடங்களில் விளக்கப்படங்களை ஷிபானி சிவநாயகம், சிந்து சிவயோகம் ஆகியோர் வரைந்தளித்துள்ளனர்.

ஏனைய பதிவுகள்