ச.சோமாஸ்கந்த சர்மா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பேராசிரியர் கா.கைலாசநாதக் குருக்கள் நினைவு வெளியீடு, மயிலணி, சுன்னாகம், 1வது பதிப்பு, 2000. (யாழ்ப்பாணம்: சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில்). (12) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×13.5 சமீ. ஜீவன் உடலெடுக்கும் போதும் உடலைவிட்டு நீங்கும்போதும் சில சம்ஸ்காரங்களை செய்யவேண்டும் என்று போசாயனர், ஆபஸ்தம்பர் முதலானவர்கள் விதித் திருக்கின்றனர். அவ்விதிகளின் அடிப்படையில் இந்தியாவில் சில விப்ரசிரேஷ்டர்கள் அபரப்பிரயோகம் என்னும் நூல்களை 1930களில் பிரசுரித்துள்ளனர். சம்ஸ்கிருதத்தில் ஆழ்ந்த ஞானமுடையோரே அந்நூல்களை படித்து விளங்கிக்கொண்டு உரிய கர்மாக்களை செய்யவும் செய்விக்கவும் கூடியவராயுள்ளனர். இந்நிலையில் யாழ்ப்பாணம் வடலியடைப்பு ஸ்ரீ அருணாசல சாஸ்திரிகளால் தமிழ் விளக்கத்துடன் பிரசுரிக்கப்பட்ட அபரப்பிரயோகம் என்னும் நூலே புரோகிதர்களுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. பிராமண சமூகத்தவரின் வேண்டுகோளுக்கமைய ஸ்ரீ தி.நடனசபாபதி சர்மா அவர்கள் ஆபஸ்தம்ப தகன சம்ஸ்காரம் என்ற நூலை 1993இலும் அதன் தொடர்பாக ஸ்வஸ்தி ஆபஸ்தம்ப சிரார்த்தம் என்னும் நூலை 1995இலும் வெளியிட்டு அளப்பரிய சேவை யாற்றியுள்ளார். தற்போது வெளிவந்துள்ள ‘தகன ஸம்ஸ்கார” என்ற இந்நூல், வைதீக கிரியைகளை செய்துவைக்கும் உபாத்யாயர்கள் குறைவாக இருக்கும் நிலையில் தகன சம்ஸ்காரத்தில் ஆரம்பத்திலிருந்து தொடர்ச்சியாக ஒன்றன்பின் ஒன்றாக என்ன விடயங்களைச் செய்யவேண்டும் என்பதை விளக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02443).